தொட்டாற் சிணுங்கிகளாய் வாழாதீர்கள்…..

தொட்டாற் சிணுங்கிகளாய் வாழாதீர்கள்…..

கோவை:

தொட்டாற்சிணுங்கி ஒரு களைச் செடி. இதனைத் தொட்டால் போதும் உடனை அதனது சிற்றிலைகளை மூடிக் கொண்டு விடும். நம்மில் சிலரிடம் இநதத் தொட்டாற்சிணுங்கிக்தனம் (touchiness) உள்ளது. இது பற்றி மகான் யோகானந்தர் தனது ‘ஆன்ம அனுபூதிக்கான பயணம்’ என்ற நூலில் தெளிவாக விளக்கி உள்ளார்.

தொட்டாற்சிணுங்கிக்தனம் படைத்தோர் மிகையான உணர்திறன், விரைந்து உணர்ச்சிவயப்படுதல், எளிதில் எரிச்சல் அடைதல், மற்றும் சொல் பொறுக்காத இயல்பு உடையோராய் இருப்பர். தவறான புரிதல், தாழ்வு மனப்பான்மை மற்றும் தணியாத‌ ஆணவம் ஆகியவை இத்தவறான தன்மையை அவர்களில் உருவாக்குகின்றன.

நாம் பிறரால் புண்படுத்தப்பட்டு விட்டோம்‌ என்ற மனக் குறை மனத்தில் ஓயாது ஓடும்போது, தோன்றும் மிதமிஞ்சிய உணர்திறன், நரம்புகளைக் கிளர்ச்சி அடையச் செய்கிறது. ‌இதனால் அகச்சினம் பிறக்கிறது. காயம்பட்ட  உணர்வுகளால் ஏற்பட்ட அவமதிப்பை அடிக்கடி அசைபோடும் போது மனம் கொந்தளித்துக் கொதிப்பறுகின்றது.


கொதிப்பால் விளையும் மன எரிச்சலைச் சிலர் தங்களின் அகத்தே அடைத்து வைக்கின்றனர். வேறு சிலரோ தங்களது நெஞ்ச எரிச்சலை கடுத்த முகம் காட்டியும், கடுஞ்சொற்கள் பேசியும் வெளிப்படுத்துகின்றனர் இவ்விருவகை தொட்டாற்சிணுங்கிகளும் வீணாகத் தங்களையும் துன்புறுத்திக் கொண்டு, தாங்கள் ஏற்படுத்தும் எதிர்மறை அதிர்வுகளால் பிறரையும் துன்புறுத்துகிறார்கள்.

பலர் தாம் பிறரால் விமர்சிக்கப்படும் போது சுய இரக்கத்திற்கு இடம் கொடுத்து தொட்டாற்சிணுங்கிகள் ஆகின்றனர்.

எளிதில் உணர்ச்சிவயப்படுவதே பெரும்பாலான மனிதர்களின் பண்பாக உள்ளது. பகுத்தறிவு இல்லாத உணர்ச்சி ஏற்படும்போது, அறிவு குருடாகிறது. ஆதலால் தவறு தன்பக்கம் இருப்பினும் தங்கள் உணர்வும் செயல்பாடும் சரியே என  தொட்டாற்சிணுங்கிகள் தவறாகக் கருதுகிறார்கள்.

தாம் உணரும் புண்பட்ட மனநிலைக்குப்  பிறர் மீது முட்டாள்தனமாகப் பழி சுமத்துகிறார்கள். எதிர்மறை மன நிலை அவர்களின் இதயங்களில் கனன்று கொண்டு இருப்பதால், அவர்களின் அக அமைதி எரியூட்டப்படுகிறது.

ஒருவர் தவறாக நடத்தப்படும்போது மனக் கிளர்ச்சி அடைய, நல்ல காரணம் இருப்பினும்,‌ எரிச்சல் அடையாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அமைதிக் குலைவிற்கு இடம்‌தராது, அமைதி காப்பவனே தன்னையே ஆள்பவன் ஆகிறான்.

அவன் பிறரின் ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்று, பிழைகள் இருப்பின் தன்னைத் திருத்திக் கொள்வான். அவனே ஆன்ம மேன்மையும் அடைவான். மகான் யோகானந்தரின் இந்த யோசனைகளைப் ஏற்று  தொட்டாற்சிணுங்கிகளாக வாழாமல். நம் ஆன்ம மலர்ச்சிக்கு வழி காண்போம் வாரீர்!

முகுந்தன் : 93453 14918

Leave a Reply