மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை தான் அதிகாரிகள் கேட்க வேண்டும் …ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு..

மத்திய அரசு என்ன சொல்கிறதோ  அதை தான் அதிகாரிகள் கேட்க வேண்டும் …ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு..

சென்னை;

இந்திய குடிமைப் பணி நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள உள்ள 80 மாணவர்களுக்காக  “எண்ணித் துணிக” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை  கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார். பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்தார்.

மாநில, மத்திய அரசுகளிடையே இருவேறு கருத்துகள் நிலவும்போது,   கருத்து கேட்கப்பட்டால் ஐஏஎஸ் அதிகாரி யார் பக்கம் நிற்க வேண்டும் என்ற மாணவரின் கேள்விக்கு, “ மாநில அரசு, மத்திய அரசு என்று வரும்போது.. சந்தேகமே இல்லை, மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்கவேண்டும்.

ஏனெனில் இந்திய குடிமைப் பணி அதிகாரிகள் மத்திய அரசின் மூலம், மத்திய அரசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்” என்று பதிலளித்தார்.

பணமதிப்பிழப்பு நல்லதா, கெட்டதா என ஒரு மாணவர் கேள்வி எழுப்ப, “உச்சநீதிமன்றம் சொன்ன சட்டப் புள்ளியை நீங்கள் பார்த்தால் அது சரிதான் என்று உங்கள் பதில் இருக்கும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாக டிஜிட்டல் மற்றும் பல இ-காமர்ஸ்கள் வந்துள்ளன. 

ஒரு முடிவை எடுக்கும்போது சில எதிர்மறை அம்சங்களும் இருக்கும். உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் வர்த்தக நாடாக இந்தியா இப்போது உள்ளது” என்று குறிப்பிட்டார்.

மற்றொரு கேள்விக்கு, “ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை. ஆனால், அதை அரசியலாக்கும்போது தான் பிரச்னை ஆகிறது. ஒன்றிய அரசு என்று அழைத்து அவமதிக்கும்போது தான் அது பிரச்னையை ஏற்படுத்துகிறது.

ஒன்றிய அரசு பிரச்னை பற்றி தமிழ்நாட்டைத் தாண்டி யாருக்கும் தெரியாது. இந்தியா என்பது பல கலாச்சாரம், பல இனக் குழுக்கள் உள்ள நாடு. இதில் எந்தப் பகுதியிலும் ஒரே இனத்து மக்கள் மட்டும் வசிக்கிறார்கள் என்று சொல்லி, அந்தப் பகுதியை அவர்களுக்காக பிரித்துக் கொடுக்க முடியாது” என்றார்.

இந்தி மொழியை கற்பது குறித்த கேள்விக்கு, “இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயமில்லை. எந்த மொழியும் கற்பதில் தவறில்லை. அது அந்த மக்களுடன் இணைந்து பணியாற்ற உதவும். இந்தியாவில் அதிக மக்கள் இந்தி பேசுவதால் இந்தி கற்றுக்கொள்வது பயன்படும்.

தமிழ்நாட்டில் இரு மொழிகொள்கைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், வேறு ஒரு பிராந்திய மொழியை படித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொல்கிறேன். அது இந்தியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை” என்றார்.

தமிழ்நாடு மக்கள் ஏன் எப்போதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்  என்ற கேள்விக்கு, “தமிழ்நாடு மக்கள் கொஞ்சம் எமோஷனல் ஆனவர்களாக இருக்கலாம்.

தமிழ்நாடு மக்கள் அவர்களுக்காக சட்டம் கொடுத்துள்ள உரிமைகளை அனுபவிக்கிறார்கள் என எடுத்துக்கொள்ளலாம்” என்று கூறினார்.

Leave a Reply