சிவராத்திரி விரதம் பிப்ரவரி 18-ம்தேதி வருகிறது !!

சிவராத்திரி விரதம் பிப்ரவரி 18-ம்தேதி வருகிறது !!

எல்லா உயிர்களுக்கும் அம்மையாகவும், அப்பனாகவும் விளங்கும் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட உகந்த நாட்களில் சிவராத்திரியும் ஒன்று. மகா சிவராத்திரி என்பது மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வருகின்றது.

அன்றைய தினம் இரவு நான்கு சாமங்கள் சிவபூஜை செய்து விரதமிருந்தால் நாள் தோறும் நற்பலன்கள் நடை பெறும். சிவராத்திரி அன்று சிவபெருமானை வில்வ இலையால் அர்ச்சித்து வழிபடுவதன் மூலம் சிறப்புகள் அனைத்தும் வந்துசேரும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் நான்காவது சாமத்தில் பூஜையை முடித்து, அதிகாலையில் நீராடி, பின்னர் உணவருந்துவது உத்தமம்.

திருவண்ணாமலையில் ஈசனின் அடி முடியைத் தேடி அலுத்துத் திரும்பிய பிறகு, அடிபணிந்த திருமாலுக்கும், பிரம்மனுக்கும் ஜோதி வடிவாய் காட்சிதந்தார் சிவபெருமான். அந்த நிகழ்வு நடைபெற்றது ஒரு சிவராத்திரி நாளில்தான்.

சிவபெருமான் வீற்றிருந்து அருள்வழங்கும் கோவில் ஒன்றில், எலி ஒன்று அங்கும் இங்கும் ஓடியது. அங்கு கருவறையில் ஏற்றப்பட்டிருந்த விளக்கின் தீபம் அணையும் தருவாயில் இருந்தது. எலிக்கோ விளக்கில் ஊற்றப்பட்டிருந்த நெய்யின் வாசம் மூக்கைத் துளைத்தது. இதனால் அது விளக்கின் அருகில் சென்று, அணையும் நிலையில் இருந்த விளக்குத் திரியில் தன் மூக்கை வைத்து உரசியது.

இதில் விளக்கில் இருந்து வெளிப்பட்ட திரியில், தீ நன்றாக பிடித்து விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. அந்த எலியை, மறு பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக இறைவன் பிறக்கச் செய்தார். எலி, விளக்கைத் தூண்டி விட்டதும் ஒரு சிவராத்திரி நாள் என்று புராணம் சொல்கிறது.

ஒரு முறை உமாதேவி விளையாட்டாக சிவபெருமான் கண்களைத் தன்னுடைய கரங்களால் மூடியதால் உலகமே இருள்சூழப்பெற்றது. அந்த நாளே ‘சிவராத்திரி’ என்று புராணங்கள் சொல்கின்றன. அந்த இரவில் ஒளி வேண்டித் தவித்தவர்களுக்கெல்லாம் ஒளி கொடுக்க, சிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். எனவே இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

சிவராத்திரி அன்று நள்ளிரவு 11.30 மணி முதல் 1 மணி வரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும். சிவராத்திரி அன்று, சிவலிங்கத் திருமேனியை வலம்புரி சங்கால் அபிஷேகித்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்த அன்னத்தை நைவேத்தியமாக படைத்து, ‘நமசிவாய’ என்னும் பஞ்சாட்சரத்தை சொல்லி வருவதன் மூலம் பாவங்கள் விலகும்.

அன்றைய தினம் சனிப்பிரதோஷமும் இணைந்து வருவதால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இந்த வருட மஹா சிவராத்திரி விளங்குகிறது.

Leave a Reply