26-ந்தேதி தொடங்குகிறது – சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா!!

26-ந்தேதி தொடங்குகிறது – சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா!!

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில். இக்கோவிலில் உள்ள அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும், குடும்பம்செழிக்கும், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். இதன் காரணமாக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து அம்மனை தரிசனம்செய்து செல்வார்கள்.

இப்படி சிறப்புமிக்க இக்கோவிலில் சித்திரை தேரோட்டம், பூச்சொரிதல் விழா, தைப்பூசதிருவிழா உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வருகிற 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, அன்று காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து அம்மன் மர கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளுகிறார்.

தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் இரவு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 8-ம் நாளான பிப்ரவரி 2-ந்தேதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 9-ம் நாள் திருவிழா அன்று இரவு 8 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

10-ம் நாளான பிப்ரவரி 4-ந்தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பட்டு வழிநடையாக ஸ்ரீரங்கம் வட திருகாவிரிக்கு வழிநடை உபயம் கண்டருள செல்கின்றார். மாலை அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பிப்ரவரி 5-ந்தேதி அதிகாலை மகா அபிஷேகமும், தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். காலை முதல் அன்று இரவு வரை அம்மன் வழி நடை உபயம் கண்டருளி மண்டகப்படி கண்டருளுகிறார். இரவு 11 மணிக்கு கோவில் வந்தடைகிறார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில்பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply