துபாய் அரசு அதிகாரி என கூறி பிரபல நட்சத்திர ஹோட்டலில் 3 மாதம் தங்கி பில் கொடுக்காமல் எஸ்கேப் ஆன மோசடி பேர்வழி…

டெல்லி ;
டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் கடந்த ஆண்டு 3 மாதங்களுக்கும் மேலாக தங்கிவிட்டு, ரூ.23.46 லட்சம் பில் கட்டணத்தை செலுத்தாமல், முகமது ஷெரீப் என்ற நபர் தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்தின் முக்கியமான அதிகாரி என்ற போலி அடையாள அட்டையுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி ஷெரீப் அந்த ஹோட்டலுக்கு சென்று அறை எடுத்து தங்கியிருக்கிறார்.
சுமார் 3 மாத காலம் அங்கு தங்கியிருந்த அந்த நபர், நவம்பர் 20-ஆம் தேதி ஹோட்டலில் இருந்து வெளியேறியிருக்கிறார். அதன் பிறகு அவர் அந்த ஹோட்டலுக்கு திரும்ப வரவே இல்லை.
அதிர்ச்சி அடைந்த லீலா பேலஸ் ஹோட்டல் நிர்வாகத்தின் காவல் நிலையத்தை அணுகினர். சமீபத்தில் அவர்கள் அளித்த புகாரின்பேரில் ஷெரீப் மீது திருட்டு மற்றும் ஆள்மாறாட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி முதல் நவம்பர் 20ஆம் தேதி வரை அந்த 5 நட்சத்திர ஹோட்டலில் அவர் தங்கியிருந்துள்ளார். அவர் தங்கியிருந்த அறை எண் 427. அவர் ஹோட்டலை விட்டு வெளியேறியபோது முறையாக யாரிடமும் கூறவில்லை. ஹோட்டல் பில்லையும் அவர் செலுத்தவில்லை. ஹோட்டல் நிர்வாகம் அவர் சுமார் ரூ.23 லட்சம் பில்லை செலுத்த வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளது.
ஹோட்டல் அறையில் இருந்து வெள்ளி பொருட்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களையும் அந்த நபர் திருடிச் சென்றுவிட்டார் என்றும் ஹோட்டல் நிர்வாகம் அளித்த புகாரில் தெரியவந்துள்ளது.
அபுதாபி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் ஃபலாவுக்கு நெருக்கமானவர் என்று ஹோட்டல் ஊழியரிடம் அந்த மோசடி பேர்வழி கூறியதாக தெரிகிறது.
அந்த நபர் ஹோட்டலில் நீண்ட காலம் தங்குவதற்காக கிட்டத்தட்ட 11.5 லட்சம் ரூபாயை முன்பணமாகவும் கொடுத்துள்ளார். இருப்பினும், அவர் நவம்பர் 20 அன்று மதியம் 1 மணியளவில் மீதி செலுத்த வேண்டிய சுமார் ரூ.23 லட்சத்தை தொகையை செலுத்தாமல் வெளியேறியதாக புகார் கிடைக்கப் பெற்றுள்ளது.
அடையாள அட்டைகள் உண்மையானவை அல்ல என்பதும் அபுதாபியில் உள்ள அரச குடும்பத்துடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.