ரூ.7கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக தான் இறந்துபோனதாக நாடகமாடிய அரசு ஊழியர் … சினிமாவை மிஞ்சிய திடுக்கிட வைத்த நிகழ்வு …

ரூ.7கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக தான் இறந்துபோனதாக நாடகமாடிய அரசு ஊழியர் … சினிமாவை மிஞ்சிய திடுக்கிட வைத்த நிகழ்வு …

மேடக்,

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்திலுள்ள வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மா நாயக். இவர் ஹைதராபாத்திலுள்ள அம்மாநில தலைமை செயலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2ம் தேதி பழைய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

இதனை சக ஊழியர்களிடம் தெரிவித்து, இனிப்புகளையும் வழங்கியுள்ளார். இதையடுத்து காரை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற பின் கடந்த 9ஆம் தேதி அந்த கார் எரிந்த நிலையில் இருந்துள்ளது. அதன் உள்ளே ஒருவர் எரிந்த நிலையிலும் மீட்கப்பட்டுள்ளார். அருகே ஒரு பெட்ரோல் கேனும் கிடந்துள்ளது.

ஆகவே தர்மாவை யாரோ காரோடு எரித்து கொன்றுவிட்டதாகவே போலீசார் முதலில் நினைத்துள்ளனர். உடனே அவரின் மனைவி நீலாவை அழைத்து, அது தர்மா தானா என்பதை உறுதிசெய்து உடலை ஒப்படைத்துள்ளனர். ஆனால் நீலா எந்தவித அதிர்ச்சியும் ஆகாமல், அவசர அவசரமாக உடலை வாங்கி கொண்டு சென்றது லேசான சந்தேகத்தை வரவழைத்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க தர்மாவை யார் கொன்றது என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்கு நடுவே தர்மாவின் மனைவி நீலோவோ, கணவர் பெயரில் இறப்பு சான்றிதழை பெற்று, அவசர அவசரமாக தர்மா இறந்தால் கிடைக்கும் இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த தகவல் போலீசாருக்கு எப்படியோ தெரியவரவே, மனைவி மீது சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக தர்மாவின் செல்போன் குறித்த ஆராய்ந்துள்ளனர். அப்போதுதான் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அந்த போன் இருக்கும் இடம் மராட்டிய மாநிலம் பூனாவில் இருப்பதும், அந்த போன் நம்பருக்கு தர்மா மனைவி நீலா அடிக்கடி பேசியதும் தெரியவந்துள்ளது.

அதன் பின்பே தர்மா உயிரோடு இருப்பதைப் போலீசார் கண்டறிந்துள்ளனர். உடனடியாக பூனாவுக்கு சென்ற போலீசார் தர்மாவை அதிரடியாக கைது செய்து தெலங்கானாவுக்கு அழைத்து வந்தனர். அவரை அழைத்து வந்து கேட்கும் விதத்தில் கேட்ட பின் அத்தனை சதி திட்டங்களும் வெளிவந்தன .

அரசு ஊழியரான தர்மா, ஆன்லைன் சூதாட்டத்தில் மோகம் கொண்டவர். இவர் தன்னிடம் இருந்த பணம் அனைத்தையும் இழந்துவிட்டார். மேலும் தர்மா, நண்பர்கள், உறவினர்கள் என தெரிந்தவர்கள் அனைவரிடமும் சுமார் 2 கோடி ரூபாய் வரை கடன் வாங்கி, சூதாட்டத்தில் அதனையும் இழந்துள்ளார்.

கடன் கொடுத்தவர்களும் தர்மாவை நெருக்கியுள்ளனர். என்ன செய்வதென தெரியாமல் இருந்த தர்மாவுக்கு, 7 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் செய்து வைத்திருப்பது அவர் மூளைக்கு எட்டியுள்ளது. ஆனால் அது அவர் இறந்த பின்பே கிடைக்கும். உடனே அதற்கான திட்டத்தையும் பக்காவாக போட்டுள்ளார். திட்டத்தின் முதல் படியாக பழைய காரை வாங்கி, அனைவருக்கும் தெரியும் விதமாக சக ஊழியர்களுக்கு இனிப்புகளை வழங்கி மனதில் பதிய வைத்துள்ளார்.

அடுத்ததாக அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்குச் சென்றுள்ளார். அங்கு சென்றபின் தான் சாதாரண திட்டம் கொலை திட்டமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சதி திட்டத்தில் மனைவி நீலா, மைனர் மகன், அக்கா சுனந்தா, அவருடைய மருமகன் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் ஈடுபட்டதும் தெரியவந்தது.

முதலில் தர்மா போல் தோற்றம் கொண்ட ஒருவரை அவர்கள் தேட துவங்கி, அஞ்சய்யா என்பவரை கண்டுபிடித்து அவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். நிஜமாபாத்தில் வேலை உள்ளது என்று கூறி அவரை, கடந்த 7ஆம் தேதி அழைத்துச் சென்று கொலை செய்து திட்டத்தை அரங்கேற்ற முயற்சித்துள்ளனர்.

ஆனால் சில காரணங்களால் அவரை தவிர்த்துவிட்டனர். இச்சூழலில் தர்மாவின் மருமகன் சீனிவாஸ், அவரைப் போல் இருந்த கார் ஓட்டுனர் பாபு என்பவரை அழைத்து வந்துள்ளார். பாபுவிற்கு மொட்டை போட்டு தர்மாவின் உடைகளை அவருக்கு அணிவித்து வெங்கடாபுரத்திற்கு காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

வந்தவுடன் காரின் முன்னால் பாபுவை வரவைத்து கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் காரின் முன்னிருக்கையில் உட்கார வைத்து காரை தள்ளிவிட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இந்த கொலை சம்பவத்தை தர்மா வாக்குமூலமாக தெரிவிக்க, போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். உடனடியாக தர்மா, மனைவி, மகன், அக்கா, அவருடைய மருமகன் ஆகிய 5 பேரை கைதுசெய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply