வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி செய்த தம்பதி.. கணவர் கைது, மனைவி எஸ்கேப்…

வெளிநாட்டில்  வேலை வாங்கி தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி செய்த தம்பதி.. கணவர் கைது, மனைவி எஸ்கேப்…

கோவை;

கோவை இருகூர் ஏ.ஜி.புதூர் சாலை பகுதியை சேர்ந்த சந்திரமோகன் (33) என்பவர் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சித்து வந்துள்ளார். அப்போது பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்த அவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார்.

அப்போது, நிறுவனத்தின் உரிமையாளர் அருண், அவரது மனைவி ஹேமலதா ஆகியோர், போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.4 லட்சம் வரை பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதனை நம்பிய சந்திரமோகன் அவர்களிடம் முன் பணமாக ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். அப்போது பணி ஆணை விரைவில் வழங்கப்படும் என தம்பதியினர் கூறி உள்ளனர். இந்த நிலையில், கடந்த ஓராண்டு ஆகியும் அவருக்கு பணி ஆணை வழங்கவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த சந்திரமோகன் அவர்களிடம் தான் செலுத்திய பணத்தை கேட்டுள்ளார். அப்போது, அருண் – ஹேமலதா தம்பதியினர் பணத்தை தர மறுத்து, அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட சந்திரமோகன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் அருண், அவரது மனைவி ஹேமலதா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது, அருண், ஹேமலதா தம்பதியினர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நபர்களிடம் ரூ.19.22 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து, அருணை கைது செய்த குற்றப்பிரிவு போலிசார், தலைமறைவான அவரது மனைவி ஹேமலதாவை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Leave a Reply