ஒத்து வாழ்தல் குறித்து மகான் யோகானந்தர்…

ஒத்து வாழ்தல் குறித்து மகான் யோகானந்தர்…

கோவை;

ஒத்து வாழ்தல் குறித்து மகான் யோகானந்தர் தனது ‘ஆன்ம அனுபூதிக்கான பயணம்’ என்ற நூலில் பகிர்ந்துள்ள கருத்துகள் குறித்து இங்கு சிந்திக்கலாமா?

தன்னுடன் ஒத்துப் போதல்:

யார் ஒருவன் தன்னுடன் ஒத்துப் போகின்றானோ அவன் தான் பிறருடன் ஒத்து வாழக்கூடும்.
1.தான் இறைவனின் குழந்தை என்பதை முதலில் உணர்ந்து  தன்னை மதிக்கவும் நேசிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். 2.புறச்சூழல் எவ்வாறு இருப்பினும், தனது குறைகளைக் கண்டு அறிந்து தன்னைத் திருத்திக் கொள்ள தீர்மானித்து விட்டால், ஒருவனால் உறுதியாகப் பிறருடன் ஒத்து வாழ இயலும்.
3.தனது மனசாட்சியின் குரலிற்கு செவி சாய்ப்பதன் மூலம் ஒருவனால் பிறருடன் ஒத்துப் போக முடியும்.
4.வாழ்க்கை அனுபவம் எதுவாயினும் அதனை மன சமநிலையுடன் எதிர்கொள்ள வேண்டும். இன்ப அனுபவத்தால் மிதமிஞ்சிக் கிளர்ச்சி அடையக் கூடாது. அதுபோல துன்ப அனுபவத்தால் துவண்டு விடாமல் துணிவுடன் அதனை எதிர்கொள்ள வேண்டும்.
5.ஒருமுகப்படுத்தும் கலையைக் கற்றுக் கொண்டு ஆழ்ந்து சிந்திக்கப் பழக வேண்டும். எண்ணக்கடலில் ஆழ மூழ்கினால் மட்டுமே, ஞான முத்துக்களைப்  பெற இயலும்.‌ இறைவனை‌  உணர்வுப்பூர்வமாகத் தேடவும் இயலும். ஆழ்ந்த சிந்தனையாளர்கள் மனக்குழப்பத்திற்கு இடம் தர மாட்டார்கள்.சிக்கலான பிரச்சினைகளுக்கும் எளிதில் தீர்வு காண்பார்கள். கடினமான சூழலை எதிர் கொள்வது எப்படி என அறிவர். உள்ளுணர்வு உணர்த்துவதை அறிந்து உரிய காலத்தில் செயல்படுவார்கள். எனவே அத்தகையவர்கள் பிறருடன் எளிதாக ஒத்துப் போவார்கள்.
6.புலன் நுகர்ச்சிக்கு அடிமையாகாது, சபலங்களுக்கு ஆட்படாது,  புலன்களை அடக்கி ஆண்டு, ஆசைகளைக் கட்டுப்படுத்துவதால்  ஒருவனால் தன்னுடன் எளிதாக ஒத்துப்போக இயலும்.

பிறருடன் ஒத்துப் போதல்:

பிறருடன் ஒத்துப் போதல் என்பது முதலில் உங்கள் மனசாட்சியுடனும், இறைவனுடனும் பின்னர் பிற மனிதர்களுடனும் ஒத்துப் போவது என்பதாகும்.
1.பிறருடன் ஒத்துப் போதல் முதற்கண் ஒருவனது இல்லத்தில் துவங்க வேண்டும். ” தெருவில் தேவதை வீட்டில் சாத்தான்” என இருப்பதால் பயன் இல்லை.
2.உங்கள் வீட்டில் உள்ளோருடன் இணக்கத்தை ஏற்படுத்த முதலில் உங்களது  நடத்தையையும் மனோபாவத்தையும் மாற்றி
அமையுங்கள். அவர்களோடு இருக்கும்போது முழுமையான மன ஒருமைப்பாட்டுடனும் கவனத்துடனும் அன்புடனும் கலந்து இருங்கள்.
3.பிறருடன் பிரச்சனை தோன்றும்போது உங்களிடம் குறை இருப்பின் அதனை  முதலில் நீக்குங்கள். பிறரது நியாயமான விமர்சனங்களை ஏற்று உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்.எதிர்பார்க்கும் மாற்றம் பிறரிடம் தானே தோன்றும்.
4.நிறைவேறாத விருப்பமே கோபமாக வடிவு எடுக்கிறது. பிறர் உங்களை சினமுறச் செய்யாது பார்த்துக் கொள்ளுங்கள்.நிதானத்தை இழக்கும் அனேகர் தாம் செய்த செயல்கள் குறித்து வருத்தமுறுகிறார்கள். எனவே உணர்ச்சிகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருங்கள்.
5.பிறரை மகிழ்விப்பதற்காக உங்கள் கொள்கைகளைத் தியாகம் செய்ய வேண்டாம். பிறர் மனம் புண்படாதபடி
உங்கள் கொள்கைகளைக் கடைப்பிடியுங்கள். வாதிடாதீர்கள். மௌனமாக இருங்கள்.உங்கள் கொள்கைகள் எதிர்க்கப்படும்போது அமைதியாக ஆனால் உறுதியாக இருங்கள். பிறருடன் ஒத்துப் போவதற்காக மிதியடி விரிப்பு போல் இருக்காதீர்கள். இல்லத்தில் இருப்போர்  நிதானம் இழக்கும் போது அவர்கள் அமைதி அடையும் வரை வெளியில் சென்று வாருங்கள்.
6.இறைவனுடன் இசைந்து இருந்தால் மட்டுமே நீங்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க‌இயலும். அப்போதுதான் நீங்கள் உலகத்தாருடன் இசைந்து இருக்க இயலும்.
இணக்கம் பிறக்க மகான் யோகானந்தரின் சிந்தனைகளைச் செயல்படுத்துவோம் வாரீர்!

தகவல்:
முகுந்தன் 93453 14918
யோகதா சத்சங்க தியான கேந்திரம்,கோயமுத்தூர்

Leave a Reply