ஹெல்மெட் போடாமல் வந்ததற்கு அபராதம் விதித்த போலிசை அரிவாளால் வெட்டிய இளைஞர்…

தென்காசி:
சங்கரன்கோவில் காவல் உட்கோட்டம், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர், தமிழ்ச்செல்வன். தென்காசி மாவட்ட எல்கையான வேலாயுதபுரத்தில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பெருமாள்பட்டியைச் சேர்ந்த காளிராஜ் என்ற இளைஞர் தலைக்கவசம் அணியாமல் வந்துள்ளார். தமிழ்ச்செல்வன் அவரை நிறுத்தி அவருக்கு அபராதம் விதித்தாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த காளிராஜ், இச்சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு குடிபோதையில் வந்து பணியில் இருந்த காவலர் தமிழ்ச்செல்வனை அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளார்.
உடனடியாக, சுதாரித்துக்கொண்ட காவலர் தமிழ்ச்செல்வன் சற்று விலகவே, அவரது இடது கையில் அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அரிவாளை போட்டுவிட்டு காளிராஜ் காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டார்.
காவலர் தமிழ்ச்செல்வன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
மேலும் தப்பி ஓடிய பெருமாள்பட்டியைச் சேர்ந்த காளிராஜை பிடிக்க சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதிர் ஆலோசனைப்படி தனிப்படை அமைக்கப்பட்டு காளிராஜை கைது செய்து, ஓட்டி வந்த பல்சர் ரக இரண்டு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.