நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி !! பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு…..

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி !! பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு…..

இந்தூர்:

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்தது.

இந்தூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன் குவித்தது.

தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் சதம் அடித்தனர். சுப்மன் கில் 78 பந்தில் 112 ரன்னும் (13 பவுண்டரி, 5 சிக்சர்), ரோகித் சர்மா 85 பந்தில் 101 ரன்னும் (9 பவுண்டரி, 6 சிக்சர்), ஹர்த்திக் பாண்ட்யா 38 பந்தில் 54 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். ஜேக்கப் டபி, டக்னர் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து 41.2 ஓவர்களில் 295 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் இந்தியா 90 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்க வீரர் கான்வே சதம் அடித்தது பலன் இல்லாமல் போனது. அவர் 100 பந்தில் 138 ரன்னும் (12 பவுண்டரி, 8 சிக்சர்), சான்ட்னெர் 34 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டும், யசுவேந்திர சாஹல் 2 விக்கெட்டும், ஹர்த்திக் பாண்ட்யா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது. ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று இருந்தது.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

கடந்த 6 ஆட்டங்களில் நாங்கள் எல்லா விஷயத்திலும் சிறப்பாக செயல்பட்டோம். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். முகமது ஷமி, சிராஜ் ஆகியோர் பெஞ்சில் வைக்கப்பட்ட போது அதற்கான வாய்ப்பை பெற்றவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.

ஷர்துல் தாகூர் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. அவரை சிலர் ‘ஏ’ மெஜிசியன் என்று அழைக்கிறார்கள். குல்தீப் யாதவ் ஒவ்வொரு முறையும் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். ஒட்டு மொத்தத்தில் பந்து வீச்சாளர்கள் மிகவும் அபாரமாக செயல்பட்டார்கள்.

சுப்மன் கில்லின் பேட்டிங் அணுகுமுறை நன்றாக இருந்தது. இளம் வீரரான அவர் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளோம். இந்த தொடர் அதிக வித்தியாசம் இருக்காது. ஆஸ்திரேலியாவை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் நடக்கிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

Leave a Reply