தலை முடியில் பூச்சி வெட்டு: சித்த மருத்துவத் தீர்வுகள்!!

தலை முடியில் பூச்சி வெட்டு: சித்த மருத்துவத் தீர்வுகள்!!

தலை முடியில் பூச்சி வெட்டு என்பது ‘ஆலோபேசியா ஏரேட்டா’ என்ற ‘ஆட்டோ இம்யூன்’ நோயால் வருகிறது. இந்த நோய் தாக்கினால், தலையின் ஒரு பகுதியில் இருந்து மொத்தமாக முடி உதிர்ந்து, அந்தப்பகுதி மட்டும் பளபளவென்று காணப்படும். தலை முழுவதும் உள்ள முடிகள் உதிர்ந்து மொத்தமாக வழுக்கையுடன் காணப்பட்டால் அதை ‘அலோபேசியா டோட்டாலிஸ்’ என்றும் கூறுவார்கள்.


1) சிவனார் வேம்புக் குழித்தைலம், சிரட்டைத் தைலம் மருந்துகளை தேங்காய் எண்ணெய்யில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்துவர முடி நன்றாக வளரும்.

2) திரிபலா சூரணத்தில் சிவனார் அமிர்தம் 200 மி. கி., கந்தக பற்பம் 200 மி. கி., சங்கு பற்பம் 200 மி. கி. காலை இரவு இருவேளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

தலைமுடி உதிர்வு டீனியா கேப்பிடஸ் என்னும் பூஞ்சை நோயிலும் வரும். தலைமுடி உதிர்தலில் ஆலோபேசியா ஏரேட்டா நோயையும், டீனியா கேப்பிடஸ் பூஞ்சை நோயையும் வேறுபடுத்த வேண்டும். இந்த பூஞ்சை நோய் தாக்கினால் தலையில் அரிப்பு, முடி உதிர்தல், அந்த இடத்தில் வெண்மை அல்லது சிவப்புத் திட்டுகள் காணப்படும், துகள் போன்று வெண்மையுடன் உதிர்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இதற்கான சித்த மருந்துகள்:

1) சீமை அகத்தி இலைச்சாற்றை தேங்காய் எண்ணெய்யுடன் காய்ச்சி அந்த இடத்தில் பூசிவர, ஊறல், செதில் உதிர்தல் நின்று மீண்டும் அவ்விடத்தில் விரைவில் முடி வளரும்.

2) பரங்கிப்பட்டை சூரணத்துடன் கந்தக பற்பம் 200 மி.கி வீதம் மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

3) பஞ்ச கற்ப விதி வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். பஞ்ச கற்ப விதி என்பது, கடுக்காய் தோல், வேப்பம் வித்து, கஸ்தூரி மஞ்சள், நெல்லி வற்றல், வெண் மிளகு இவைகளை சம அளவு எடுத்து பொடித்து பாலில் காய்ச்சி ஆற வைத்து உருவாக்கும் தைலம்.

இதை தலையில் நன்றாக பூசி ஒரு மணி நேரம் சென்ற பின்பு குளிக்க வேண்டும். இதனால் புழுவெட்டு, பொடுகு, பூஞ்சை, பேன் இவைகள் தலையில் இருந்து நீங்கி முடி செழித்து வளரும்.

Leave a Reply