ஏடிஎம் மெஷினை அலேக்காக தூக்கிச் சென்ற திருடர்கள்… அதிர்ச்சி வீடியோ ..

ஏடிஎம் மெஷினை அலேக்காக தூக்கிச் சென்ற திருடர்கள்… அதிர்ச்சி வீடியோ ..

ராஜஸ்தான் ;

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம், விகாஸ் சங்வான் பகுதியில் பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வந்தது. இந்த ஏ.டி.எம். மையத்திற்குள் நேற்று நள்ளிரவு 1:30 மணியளவில் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துணிகர கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

அங்குள்ள ஏ.டி.எம்மை உடைத்து அதிலிருந்து பணத்தைத் திருட முயற்சித்துள்ளனர். ஆனால், அம்முயற்சி தோல்வி அடைந்ததால், அவர்கள் ஒரு வாகனத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை கட்டி இழுத்து, அப்படியே பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர்.

ஏ.டி.எம் மையத்திற்கு அருகில் இருந்தவர்களுக்கு சப்தம் எதுவும் கேட்காதவாறு அலேக்காக ஏ.டி.எம் இயந்திரத்தை அங்கிருந்து தூக்கிச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த இயந்திரத்தில் ரூ.8 லட்சத்திற்கும் அதிகமான பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சி.சி.டி.வி. கேமரா பதிவுகளின் உதவியுடன் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏடிஎம் அருகே இருக்கும் சி.சி.டி.வி கேமராவில், ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறினர்.முன்னதாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு அஜ்மீரின் அரைன் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்தில் சுமார் ரூ.30 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்ற நிலையில், இரண்டாவதாக இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. முதல் திருட்டில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. 2-வது திருட்டில் சுமார் ரூ.8 லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு முறையும் ஒரே மாதிரியான கொள்ளைய அடிக்கப்பட்டுள்ளதால், ஒரே கும்பலாக இருக்கலாம் என்ற சந்தேக கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சி.சி.டி.வி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply