நான் முரடன்… என் தலைவரை பற்றி பேசினால் கையை வெட்டுவேன்… பகிரங்க எச்சரிக்கை விடுத்த திமுக எம்.பி…

மதுரை:
மதுரை மாநாடு சேது சமுத்திர திட்டத்தை வலியுறுத்தி மதுரையில் திராவிடர் கழகம் நடத்திய திறந்தவெளி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, மத்திய பாஜக அரசை கடுமையாக சாடினார் .
தமிழர்களின் பாவம் பொல்லாதது என்றும் வயிறு எரிஞ்சு சொல்கிறேன் மீண்டும் பாஜகவால் வெற்றிபெற முடியாது எனவும் சாபம் விடுத்தார். மேலும், நீங்கெல்லாம் நல்லா இருப்பீங்களா என பகிரங்கமாக பாஜகவினருக்கு சாபம்விட்டார்.
தன்னால் தவறை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்றும் எங்கே தவறு நடக்கிறதோ அங்கே முரடனாக மாறுவேன் எனவும் மிகவும் வெளிப்படையாக டி.ஆர்.பாலு பேசினார்.
பாஜகவினர் சாபம் விட்டால் மட்டும் தான் பலிக்குமா, நான் சாபம் விட்டால் பலிக்காதா என வினவிய அவர், யாராவது தனது தலைவரையோ, திக தலைவர் வீரமணியையோ சீண்டினாலோ தாக்க வந்தாலோ தாம் கையை வெட்டுவேன் என பகிரங்கமாக தெரிவித்தார்.
தனக்கு பொய் பேசத் தெரியாது என்றும் எப்போதும் வெளிப்படைத் தன்மையுடன் உண்மையை மட்டுமே பேசும் வழக்கம் கொண்ட நபர் தாம் எனவும் டி.ஆர்.பாலு கூறினார்.
பேச வேண்டியதை எல்லாம் பேசிவிட்டு கடைசியாக கி.வீரமணியை பார்த்து கூறிய டி.ஆர்.பாலு, ”நீங்க முறைப்பதை வைத்து பார்த்தால் நாளைக்கே முதல்வரிடம் போட்டுக் கொடுத்துவிடுவீர்கள் போல் இருக்கே, இப்படியெல்லாம் பேச வேண்டாம்னு சொல்லுங்க, நாவடக்கம் தேவை என சொன்னாலும் சொல்வீங்க” எனப் பேசியதால் அங்கு சிரிப்பலை எழுந்தது.