அதிமுக செயலாளர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் …” திமுக எம்.எல்.ஏ. போலீசில் புகார்…

அதிமுக செயலாளர்  எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் …” திமுக எம்.எல்.ஏ. போலீசில் புகார்…

ராஜபாளையம் ;

ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், ராஜபாளையம் நகர  அதிமுக செயலாளர் வக்கீல் முருகேசன் மீது சேத்தூர் காவல் நிலையத்தில்  புகார் கொடுத்துள்ளார்.   

அவர் கொடுத்த புகார் பின்வருமாறு;

கடந்த 21 ஆம் தேதி ராஜபாளையம் வட்டம், தேவதானத்தில் முன்னாள்  அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்ட எம்.ஜி.ஆர். பிறந்தநாள்  விழா பொதுக்கூட்டத்தில் பேசிய வக்கீல் முருகேசன், வன்முறையைத்  தூண்டும் விதத்திலும், அசிங்கமான வார்த்தைகளாலும், என்னை வெட்டிக் கொல்லப் போவதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

நானும் வக்கீல்  முருகேசனும் ஒரே சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.  தொகுதி வளர்ச்சிக்காக நடைபெற்று வரும் ராஜபாளையம் பேருந்து நிலையப் பணியைக் கொச்சைப்படுத்தி, பஸ் ஸ்டாண்ட் ரெண்டு பக்கமும் அடைத்துவிட்டதால் மக்கள் பிரதிநிதியாகிய என்னை மக்கள் செருப்பால் அடிப்பார்கள் என்று கலவரத்தைத் தூண்டும் விதத்தில் பேசியிருக்கிறார்.  

‘உன் ஏரியாக்குள்ள வந்து கூட்டம் போடுறேன்டா… வந்து பாருடா…’ என்று  கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வக்கீல் முருகேசன் பல கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதால் எனது உயிருக்குப் பயமாக  உள்ளது.

அவருடைய மேடைப் பேச்சால் எனக்கு அவமானமும் உயிர் பயமும் ஏற்பட்டுள்ளது. அவர் பேசிய வீடியோ பதிவை பார்த்துவிட்டுத்தான், இந்தப் புகாரை அளித்திருக்கிறேன்.  தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. அளித்த புகாரின் பேரில் வக்கீல் முருகேசன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் சேத்தூர் காவல்நிலையம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.  

Leave a Reply