ரஜினி சார்பில் வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…

ரஜினி சார்பில் வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…

சென்னை ;

நடிகர் ரஜினியின் பெயர், புகைப்படம் மற்றும் குரலை அனுமதியின்றி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

சில நிறுவனங்கள் பிரபலமடைய நடிகர் ரஜினியின் பெயர், புகைப்படங்கள், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், “ரஜினிகாந்த் பிரபலமாக இருப்பதால் ரஜினியின் புகைப்படம், குரல் உள்ளிட்ட அனைத்துக்குமான முழு உரிமையும் அவர் வசமே உள்ளது.

எனவே குரல், புகைப்படம் மற்றும் பெயரை முன் அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் சுப்பையா இளம்பரிதி அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், “இந்த அறிவிப்பு என்பது சென்னை போயஸ் கார்டன் முகவரியில் வசித்துவரும் ரஜினிகாந்த் பெயரில் வெளியிடப்படுகிறது. இவரின் ஸ்டைலான நடிப்பினால் ரசிகர்கள் அவரை சூப்பர் ஸ்டார் என அழைத்து வருகின்றனர்.

திரையுலகம் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அவருக்கான மரியாதை நிகரற்றதாக உள்ளது. ரஜினிகாந்த் செலிபிரிட்டி அந்தஸ்தில் இருக்கிறார். இந்நிலையில் பல உற்பத்தி நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்த்தின் குரல், போட்டோ, புகழ் உள்ளிட்டவற்றை அவர் அனுமதியின்றி பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

இது பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே முன் அனுமதியின்றி வர்த்தக ரீதியாக அதைப் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக, வரும் நாட்களில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply