மதிமுக கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர்…. போலீசில் பரபரப்பு புகார்…

விருதுநகர் ;
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் கடந்த 2 மாதங்களாக நடைபெறாத நிலையில் அதற்கான கருத்து கேட்பு கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது பாஜக கவுன்சிலர் குமரி பாஸ்கருக்கும் மதிமுக கவுன்சிலர் ராஜேஷிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பாஜக கவுன்சிலருக்கு ஆதரவாக திமுக கவுசிலர் வெயில்ராஜ், மதிமுக கவுன்சிலர் ராஜேசுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து கூட்டத்தை விட்டு வெளியேறிய மதிமுக கவுன்சிலர் ராஜேசை திமுக கவுன்சிலர் வெயில் ராஜ் சக கவுன்சிலர்கள் முன்னிலையில் தாக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இருவருக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்ததால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இதனை தொடர்ந்து திமுக கவுன்சிலர் தன்னை தகாத வார்த்தையில் பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தததால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மதிமுக கவுன்சிலர் ராஜேஷ் சிவகாசி நகர் காவல்நிலையத்தில் திமுக கவுன்சிலர் வெயில் ராஜ் மீது புகார் அளித்துள்ளார்.