யோகானந்தரின் காந்தீய சிந்தனைகள்…

கோவை:
அண்ணல் காந்தி அடிகள் மறைந்த நாள் ( ஜனவரி 30) தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிற்கு அஹிம்சை வழியில் விடுதலை பெற்றுத் தந்த மகத்தான ஆத்மாவான மகாத்மா காந்தி பற்றிய சிந்தனைகளை மகான் யோகானந்தர் தனது நிரந்தரத்திலிருந்து மென் மொழிகள் (Whispers from Eternity) என்ற நூலில் வழங்கி உள்ளார். இதோ ஒரு தியாகியைப் பற்றிய ஒரு யோகியின் சிந்தனைகள்:
ஓ காந்தியே!, மக்கள் உங்களுக்கு மகாத்மா, “மகத்தான ஆன்மா” என நற்பெயர் சூட்டினர். உங்களது இருப்பால், பற்பல சிறைகள் ஆலயங்கள் ஆயின. வாய் அடக்கப்பட்டாலும், தங்களின் குரல் கூடுதல் ஆற்றலுடன் வளர்ந்து உலகைச் சுற்றி ஓங்கி ஒலித்தது. சத்தியாகிரகம் (“வாய்மை வழுவாமை”) வழி வந்த உங்களின் வெற்றிச் செய்தி மனித குலத்தின் மனசாட்சியைத் தொட்;டது.
பீரங்கிகளை நம்பாமல், ஆண்டவன் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கையால், வரலாற்றில் ஓர் இணையற்ற சாதனையைச் சாதித்தீர்கள்: வெறுப்புறாது அல்லது இரத்தம் சிந்தாது ஒரு மாபெரும் நாட்டினை அன்னியர் ஆட்சியிலிருந்து விடுவித்தீர்கள்.
உண்ணாநோன்பினால் உரு மெலிந்த, உங்கள் உடல் ஒரு பித்தனின் துப்பாக்கியிலிருந்து வந்த மூன்று குண்டுகளால் தாக்குண்டு தரையில் சரிந்த பொழுது, உங்கள் கரங்கள் முயற்சியின்றி மன்னிப்பின் இனியதொரு சைகையாய் உயர்ந்தன. உங்கள் வாழ்நாள் முழுவதும் கள்ளங்கபடமற்ற கலைஞராக இருந்த நீங்கள் இறக்கும் வேளையில் ஒப்புயர்வற்ற கலைஞர் ஆயினீர்கள். உங்கள் தன்னலங் கருதா வாழ்வின் தியாகங்கள் யாவையும் அந்த இறுதி அன்பு செய்கையை நடைபெறச் செய்தன.
மனிதனை ஒழுங்குபடுத்த இறைவன் தனது வியக்கத்தக்க ஆற்றல்கள் அல்லாது, அன்பினைப் பயன்படுத்துவது போல, நீங்கள் மற நெறிகளைப் புறக்கணித்து அற நெறியின் அமைதியான ஆற்றலில் உங்கள் நம்பிக்கையை வைத்தீர்கள்.
ஓ மெய்மையின் எளிய மகானே, எதிர்காலப் போர் வீரர்கள் உங்களது படிப்பினையைக் கசடறக் கற்று இறுதியில் புரிந்து கொள்வார்கள்: மனிதனது அடிப்படைப் பகைவர்கள் ஒரே தந்தையின் இறை மக்களான அவனது உடன்பிறப்புகள் அல்ல, மாறாக அழியும் உடல் என்ற அறியாமையால் பிறந்த எதிரிகளான அவனது சொந்தத் தன் முனைப்பே.
இப்பொழுது தன்னல அரசியல், பேராசை, கபடு மற்றும் போர் முன்னேற்பாடுகள் ஆகியவற்றால் நெறி தவறிய நாடுகள், என்றோ ஒரு நாள் ஏற்கும் இதயத்துடன் தங்களது வரு முன் மொழியப்பட்ட மூதுரைகளுக்கு செவி சாய்க்கும்:
“மக்களிடையே இன்னாசெய்யாமை வந்து உள்ளது. இது வாழும், இது உலக அமைதியின் முன்னோடியாய் இருக்கிறது.”
தகவல்:
முகுந்தன் (9345314918)
யோகதா சத்சங்க தியான கேந்திரம்,
கோயமுத்தூர். 641015.