படிக்க வந்த அரசு பள்ளி மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த கொடுமை …

படிக்க வந்த அரசு பள்ளி மாணவர்களை   கழிவறையை சுத்தம் செய்ய வைத்த கொடுமை …

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 180-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 12 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

இந்நிலையில் சக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அந்த பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் 2 மாணவர்கள் குழாயில் தண்ணீர் பிடித்து கழிவறையில் ஊற்றி சுத்தம் செய்கின்றனர். பின்னர் அவர்கள் அந்த குழாய் தண்ணீரை மூடி விட்டு செல்கின்றனர்.

இதேபோல புகைப்படங்களில் மாணவிகள் சிலர் பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை துடைப்பத்தால் அகற்றுகின்றனர். மாணவர்கள் ஒட்டடை அடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை கண்ட மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளிக்கு படிப்பதற்காக அனுப்பிய குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதை தொடர்ந்து, தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், சக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்தார்.

மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு பள்ளியில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply