வீட்டிலேயே மினி டாஸ்மாக் நடத்தி வந்த பெண் கைது…

சென்னை
சென்னையில் டாஸ்மாக் அரசு மதுக்கடைகளுக்கு போட்டியாக ஆங்காங்கே பெட்டிக்கடை, மளிகைக்கடை போன்ற கடைகளில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பவர்களை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் பிடாரி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீடு டாஸ்மாக் கடைபோல செயல்படுவதாகவும், அங்கு சர்வ சாதாரணமாக மதுபாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் மயிலாப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலில் குறிப்பிட்ட வீட்டில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை போட்டனர். அங்கு மதுபாட்டில்கள் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. 140 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வனிதா (வயது 35) என்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரது கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.