பிரிந்து வாழும் தம்பதிகள் சேர்ந்து வாழ வேண்டிய பரிகாரம்…

பிரிந்து வாழும் தம்பதிகள் சேர்ந்து வாழ வேண்டிய பரிகாரம்…

தம்பதியினரின் பிரச்சினையை உலவியல் ரீதியாக ஆய்வு செய்யும் போது பல காரணங்கள் உண்மையான பிரச்சினையாகவும் சில காரணங்கள் மிகவும் அநர்த்தமாகவும் இருக்கிறது. அவை எதனால் என்றும் பார்க்கலாம்.

ஒரு வீட்டிற்கு ஒரே குழந்தை இருப்பதே முதல் காரணம். ஒரு குழந்தையை அளவு கடந்த அன்பினை செலுத்தி வளர்த்து விடுகிறார்கள். அந்த குழந்தை தனக்கே கட்டுப்பட்டு தன் விருப்ப படியே இருக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் எண்ணம் பல குழந்தைகளின் திருமண வாழ்வை அழிக்கிறது.

சம்பந்திகளின் கருத்து வேறுபாடு தம்பதியினரின் நெருக்கத்தை குறைக்கிறது. விட்டுக் கொடுத்து வாழும் தன்மை குறைவதால் சிறிய விஷயத்தை பெரியதாக்கி தம்பதியினரை பல பெற்றோர்கள் பிரித்து விடுகின்றனர்.

திருமணத்திற்கு முன்பு சம்பந்திகளிடம் கருத்து வேறுபாடு வந்தால் திருமணத்தை ரத்து செய்வது திருமணத்திற்கு பிறகு தம்பதியினரை வாழவிடாமல் செய்வதைவிட உத்தமம். திருமணமாகி 1 மாதம் அதிகபட்சம் 3 மாதத்திற் கெல்லாம் ஜோதிடரையும் நீதிமன்றத்தையும் அணுகுபவர்கள் முதலில் கூறும் பிரச்சினை சம்பந்திகள் பிரச்சினைதான். தம்பதியினர் மன மகிழ்ச்சியுடன் இருந்தால் மட்டுமே இல்வாழ்கை இனிமையாக இருக்கும்.

பெற்றோர்களின் ஈகோ தம்பதியினருக்கு நிம்மதியின்மையை தருகிறது. தற்காலத்தில் ஆண், பெண் இருவரும் வேலைக்கு சென்றால் மட்டுமே பொருளாதார நெருக்கடி இல்லாமல் இருக்கும் என்ற நிலை இருப்பதால் தம்பதிகள் இருவருமே வேலைக்கு செல்கிறார்கள்.

இருவருக்கும் ஆண், பெண் நண்பர்கள் அதிகமாக இருக்கிறார்கள். தம்பதிகள் தங்களுக்குள் நல்லிணக்கம் ஏற்பட்ட பிறகு தங்களுடைய நண்பர்களை வாழ்க்கை துணைக்கும் குடும்பத்திற்கும் அறிமுகம் செய்வது உத்தமம்.

திருமணத்திற்கு முன்பே நண்பர்களை அறிமுகம் செய்து வீண் வதந்தி, பிரச்சினைகளை தவிர்த்தால் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். அத்துடன் ஆணுக்கு வருமானம் அதிகமாகவும் பெண்ணுக்கு வருமானம் குறைவாகவும் இருந்தால் நல்லது.

ஆணுக்கு வருமானம் குறைவு அல்லது வேலையே இல்லாமல் திருமணம் செய்யும் போது ஒரிரு மாதத்தில் பிரச்சினை வந்துவிடுகிறது. இது தம்பதிகளுக்கு ஈகோ பிரச்சினை வந்து மற்றவரை அடக்க முயல்கிறார்கள்.

பொருந்தாத இரு ஜாதகங்களை இணைத்து தரும் படி ஜோதிடரை நிர்பந்தம் செய்தல் கூடாது. இரு குடும்பத்தின் தொழில், தகுதி ஒத்து போகும் போது திருமண பொருத்தத்தை பெரிதாக கருதாமல் திருமணம் நடந்த பிறகு வருந்தி பிரயோசனம் இல்லை.

ஆண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் பெண் ஜாதகத்தில் சனி இருப்பதும் பெண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் ஆண் ஜாதகத்தில் சனி இருப்பதும் சிறப்பில்லை. இந்த அமைப்பு இருந்தால் திருமணத்திற்கு பின் தொழில் வேலையில் பாதிப்பு ஏற்பட்டு, ஜாதகனுக்கு கையில் பணம் தங்காது , சுப மங்கலப் பொருட்கள் சேராது, , குடும்பத்தில் பிரிவினை ஏற்படும், சரியான தூக்கம் வராது.

6, 7-ம் அதிபதி ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் திருமணத்தில் தடை ஏற்படும். அதிர்ஷ்ட வசமாக திருமணம் நடந்தாலும், (எத்தனை திருமணம் நடந்தாலும்) அத்தனையும் தோல்வியில் முடியும்.

ஜனன கால ஜாதகத்தில் 2, 7-ம் பாவகம், அதிபதிகள் 6,8-ம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெறும் போது விவகாரத்து ஏற்படும். 2, 7-ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் வக்ர கிரகங்கள் பிரிவினையை தரும். 2, 7-ம் பாவகம், அதிபதிகள் 12-ம் பாவகம், அதிபதிகளுடன் சம்பந்தம் பெறும் போது பிரிவினை ஏற்படுகிறது.

லக்ன சுப வலுப் பெற்றவர்களுக்கு 12-ம் அதிபதி, 12-ல் நின்ற கிரகங்களின் அந்தர காலங்களில் சுபமாகவோ/அசுபமாகவோ குறுகிய பிரிவினை ஏற்படுகிறது. 12-ம் அதிபதி குறுகிய கால தசை நடத்தும் கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், கேது போன்ற கிரகங்களாக இருந்தால் பாதிப்பும் குறுகிய காலமாகவே இருக்கிறது.

நீண்ட காலம் தசை நடத்தும் குரு, சனி, ராகு, புதன், சுக்கிர தசைகள் வாழ்நாள் முழுவதையும் பிரிவினையுடனே கழிக்கச் செய்கிறது. லக்னம் வலிமை இழந்தவர்களில் பலர் வாழ்க்கை துணையுடன் சேருவோமா? என்ற சந்தேகத்துடன் ஜோதிடரை அணுகுகிறார்கள்.

ஜோதிட ரீதியான தீர்வு

பெண்கள் ஜாதகத்தின் ஜனன சுக்கிரனுக்கு கோச்சார செவ்வாய் சம்பந்தம் பெறும் போதும் ஜனன 7-ம் அதிபதிக்கு கோச்சார 5-ம் அதி பதிக்கு சம்பந்தம் பெறும் போதும் சேர்ந்து வாழும் மன நிலையும் ஈர்ப்பும் உருவாகும் காலம். ஆண் ஜாத கத்தின் ஜனன செவ்வாய் அல்லது குருவுக்கு கோச்சார குரு அல்லது சுக்கிரன் சம்பந்தம் பெறும் போதும் ஜனன 7ம் அதிபதி கோச்சார 5-ம் அதிபதி சம்பந்தம் பெறும் போதும் முயற்சி செய்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

கோச்சார குரு 2, 7-ம் அதிபதியுடன் சம்பந்தம் பெறும் போதும் சேர்ந்து வாழும் மனநிலை உருவாக்கும். சில தம்பதியினர் குழந்தை பிறந்த பிறகு பிரியும் நிலை ஏற்படும். குழந்தை பிறந்த பிறகு பிரித்தவர்கள் குழந்தையின் 9-ம் அதிபதிக்கு கோச்சார குரு சம்பந்தம் பெறும் காலத்தில் சேரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

பரிகாரம்

திருச்செங்கோடு அர்த்தநாதீஸ்வரர் வழிபாடும் சங்கரன் கோவில் சங்கர நாராயணர், கோமதியம்மன் வழிபாடும் கைமேல் பலன் தரும்.

Leave a Reply