பொறாமையே வெளியேறு… பொறாமை பற்றி மகான் யோகானந்தர்…

பொறாமையே வெளியேறு… பொறாமை பற்றி மகான் யோகானந்தர்…

கோவை;

பொறாமை பற்றி மகான் யோகானந்தரின் சிந்தனைகள் அவரது ‘ஆன்ம அனுபூதிக்கான பயணம்’ என்ற நூலில் இடம் பெற்றுள்ளன. அது பற்றிய சில கருத்துக்களை இங்கு காண்போம்.

பொறாமை என்பது ஓர் எதிர்மறை உணர்வு. பிரபஞ்ச மாயையின் ஒரு தீய சக்தி பொறாமை. பொறாமை தாழ்வு மனப்பான்மையால் விளைகிறது. அது தன்னை சந்தேகம் மற்றும் அச்சத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிறது.

கேடுகள்:

பொறாமையால் வரும் கேடுகள் பற்பல. அவற்றில் சில.

*பொறாமைக்கு ஆளாகும் போதெல்லாம் ஒருவன் சாத்தானால் வழிநடத்தப்படுகிறான்.

*உன் எதிரியைப் புண்படுத்துவதும், பலவீனப்படுத்துவதும், நியாயமே என்ற மனபாங்கினை பொறாமை ஒருவனுக்குள் உருவாக்குகிறது.

*ஒருவன்  இதனால் பிறரைப் புண்படுத்த விழையும் வேளைகளில் எல்லாம் தன்னையே கூடுதலாக புண்படுத்திக் கொள்ள நேரிடுகிறது.

*மனித உறவுகளுக்கு ஒரு தொடர் அபாயமாக இருந்து வருவது பொறாமை. பொறாமையின் பிரிக்கும் தன்மை இணக்கம் என்ற சொர்க்கத்தை பூசல் என்ற நரகமாக மாற்றுகிறது. இதனால் மனித உறவுகள் தகர்க்கப்பட்டு, குடும்பங்கள் பிளவு படுகின்றன. குடும்ப அமைதி குலைகிறது.

*அக அமைதியை அடியோடு பொசுக்கவல்லது பொறாமை.

தீர்வு:

பொறாமையால் விளையும் ஒரே வெகுமதி துன்பமே! எனவே மனதில் பொறாமை உணர்வுக்கு புகலிடம் அளித்தல் கூடாது. பொறாமை உணர்வைப் போக்குவது எப்படி என வழிகாட்டி உள்ளார் மகான் யோகானந்தர். இதோ அவர் காட்டும் வழிமுறைகள்:

* பொறாமையின் குரல் உங்களுள் எப்போது கேட்டாலும், அது உங்கள் குரல் அல்ல எனப் பகுத்தறிந்து, அதற்கு செவி மடுக்காது, பொறாமையே வெளியேறு!  என்று ஆணையிட வேண்டும்.

*நேர்மை, கனிவு, நேசம், புரிதல் மற்றும் சுயநலமற்ற நட்பு மூலம் உங்களைச் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவர் கூடுதலாக தவறிழைப்பின் அவரிடம் அதற்கேற்ப கூடுதலாக நேசம் காட்ட வேண்டும்.

* பொறாமைத் தீயின் தாக்கத்தில் இருக்கும் போது ஒருவர் வாயிலிருந்து வெளிப்படும் சொற்கள், ஒரு பீரங்கி போல் செயல்பட்டு வெடிகுண்டுகளை விடக் கொடிய விளைவுகளை விளைவிக்கும். ஆதலால் அத்தகைய தருணங்களில் கூடுதலான பேச்சு கூடாது என உணர்ந்து செயல்பட வேண்டும். இடைவிடாமல் ஆக்கபூர்வமான எண்ணங்களை ஒலிபரப்புவதன் மூலம் பொறாமையை வெற்றி கொள்ள வேண்டுமே தவிர, வெறுப்பை ஒலிபரப்பினால், அவர்கள் அதனை ஏற்று எதிர்ச்செயல் புரிய நேரிடும்.

* “நான் பொறாமைத் தளையில் இருந்து விடுபட்டு இருக்கிறேன். என்னுடையது அல்லாதது எதுவாயினும் என்னை விட்டு அகலட்டும்”என இறைவனிடம் மனம் உருகி வேண்ட வேண்டும்.

* பொறாமையால் தன்னையும் துன்புறுத்திக் கொண்டு பிறரையும் துன்புறுத்துவோர் தங்கள் தவறை உணர்ந்து திருந்த அவர்களை வழிநடத்துமாறு கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டும்.

மகானின் இந்த மணிமொழிகளை மனதில் ஏற்று. செயல்படுத்தி பொறாமையை போக்கிடுவோம் வாரீர்!

தகவல்:
முகுந்தன்,
யோகதா சத்சங்க தியான கேந்திரம், கோயமுத்தூர்.
93453 14918.

Leave a Reply