வங்கி கடன் செலுத்தியவர்களின் 34 லட்ச ரூபாய் பணத்தை ஆட்டையை போட்டு ரூம் எடுத்து ஆன்லைன் ரம்மி விளையாடிய SBI வங்கி அசிஸ்டெண்ட் மேனேஜர் கைது…

வேலூர்;
வேலூர் மாவட்டம் காந்திநகர் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சிறப்பு கடன் செயலாக்கம், அனுமதி மற்றும் பராமரிப்பு மையம் இயங்கி வருகிறது. இங்கு விருதுநகரை சேர்ந்த யோகேஸ்வர பாண்டியன் என்பவர் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார்.
காட்பாடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த இவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார்.
இதனால், வங்கியில் கல்வி கடன் வாங்கியவர்கள் செலுத்திய பிரிமியம் தொகையை மோசடியாக தனது கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார். கடந்த 2018 ஜூன் மாதம் முதல் 2021 ஜூலை மாதம் வரையில் 137 வாடிக்கையாளர்களின் பணத்தை யோகேஸ்வர பாண்டியன் கையாடல் செய்துள்ளார்.
இது தொடர்பாக வாடிக்கையாளர்களின் புகாரின் பேரில் மேற்கொண்ட விசாரணையில் யோகேஸ்வர பாண்டியன் 34 லட்ச ரூபாய் கையாடல் செய்தது உறுதியானது.
இது தொடர்பாக வங்கியின் மேலாளர் சிவகுமார், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.