பொதுமக்களுக்கு இடையூறு … ரஜினி மகளை விசாரிக்க கலெக்டர் உத்தரவு…

திருவண்ணாமலை;
லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நடிகர்கள் விஷ்ணு விஷால் ,விக்ராந்த் இப்படத்தில் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் .
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்திருக்கிறது. நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்டிருக்கின்றன. படப்பிடிப்பை பார்ப்பதற்காக பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்திருக்கிறார்கள் .
அப்போது பொதுமக்களிடம் படக்குழுவின் பவுன்சர்கள் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேலும், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் இருக்கும் அரசு விடுதிக்கு மாணவிகள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அலுவலகத்தில் இருக்கும் ஈ சேவை மையத்திற்கும் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் சுற்றிலும் கயிறு கட்டியதாக புகார்கள் எழுந்திருக்கின்றன.
வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கின்ற வகையில் படப்பிடிப்பு நடத்தியதாக புகார்கள் இருந்து உள்ளதால் இது குறித்து படத்தில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் படக்குழு இடம் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டிருக்கிறார்.