கல்லீரல் வீக்கம், கல்லீரலில் பாதிப்பு போன்றவற்றைத் தடுக்கும் ”மஞ்சள் டீ’ மருந்து”!

கல்லீரல் வீக்கம், கல்லீரலில் பாதிப்பு போன்றவற்றைத் தடுக்கும் ”மஞ்சள் டீ’ மருந்து”!

ஒருவருக்குக் காலில் அடிபட்டுவிட்டது, ரத்தம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். உடனே யாராவது ஒருவர், `கொஞ்சம் மஞ்சள் தூளை எடுத்து அடிபட்ட இடத்துல வைங்க’ என்று கைவைத்தியம் சொல்வதைக் கேட்டிருப்போம். மஞ்சள், ரத்தக் கசிவதை நிறுத்தும், மருந்தாகவும் செயல்படும்.

அத்தனை மகத்துவம்மிக்க மருந்து மஞ்சள். இதில் நுண்ணுயிர்களை எதிர்கொள்ளும் திறன் இருக்கிறது. அதோடு, நம் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டக்கூடிய தன்மையும், வீக்கத்தை குறைக்கும் ஆற்றலும் மஞ்சளுக்கு உண்டு. இதனால் காயம் விரைவாகக் குணமாகும். உடலுக்கு வெளியே வைத்திருக்கும்போதே இவ்வளவு நன்மைகளைத் தரும் மஞ்சள், உடலுக்குள்ளே செல்லும்போதும் பல நன்மைகளைத் தரக்கூடியது.

இதில், `குர்குமின்’ (Curcumin) என்ற வேதிப்பொருள் நிறைந்திருக்கிறது. இதுதான் மஞ்சளின் நிறத்துக்கும், நமது உடலுக்குக் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளுக்கும் காரணம்.

மஞ்சள் தரும் நன்மைகள்…


இது, பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளை எதிர்க்கும் தன்மை கொண்டது. இதில், ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் ஆன்டி-இன்ஃப்ளாமேட்டரி பண்புகள் நிறைந்துள்ளன. ஆக, மஞ்சளால் கிடைக்கும் நன்மைகளில் சில…

 • மூட்டுவலியைக் குறைக்கும்.
 • நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
 • புற்றுநோய் வருவதைத் தடுக்கும்
 • இதயநோய்களிலிருந்து காக்கும்.
 • ஆஸ்துமா மற்றும் குடல் அழற்சி நோய் (Inflammatory Bowel Disease) போன்றவற்றைக் குறைக்கும்
 • முதுமைக் காலத்தில் ஏற்படும் அல்சைமர் நோய் (Alzheimer’s disease) வராமல் தடுக்கும்.
 • கல்லீரல் வீக்கம், கல்லீரலில் பாதிப்பு போன்றவற்றைத் தடுக்கும்.
 • பித்தப்பையில் கற்கள் உண்டாவதைத் தடுக்கும்
 • சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்; அதற்கான சிகிச்சைக்கும் உதவும்.
 • சி.பி.ஓ.டி (Chronic obstructive pulmonary disease – COPD) போன்ற நுரையீரல் நோய்கள் வராமல் காக்கும்.
  உலகின் ஒட்டுமொத்த மஞ்சள் உற்பத்தியில், எழுபத்தெட்டு சதவிகிதம் இந்தியாவில்தான் நடைபெறுகிறது. நாம் நமது பாரம்பர்ய சமையலில் மஞ்சளைச் சேர்த்து நீண்டகாலமாகப் பயன்படுத்தி வந்திருக்கிறோம். சமீப காலமாக மாறிவரும் உணவுப் பழக்கங்களால் மஞ்சளைப் பயன்படுத்துவது குறைந்திருக்கிறது. `ஒரு நாளைக்கு நமக்கு மஞ்சளின் உட்பொருளான குர்குமின், ஒன்று முதல் மூன்று கிராம் அளவுக்கு நமக்குத் தேவை’ என்கின்றன சில ஆய்வுகள். மஞ்சளை நாம் சாம்பார், ரசம், கூட்டு, பொரியல்… எனப் பலவிதமான உணவு வகைகளில் பயன்படுத்துகிறோம். இதில் டீ தயாரித்தும் அருந்தலாம். நமக்குத் தேவையான குர்குமின் அளவை மஞ்சள் டீ மூலமாகவும் பெறலாம். மற்ற முறைகளைவிட, மஞ்சள் டீ மூலம் உட்கிரகிக்கப்படும் குர்குமின் அளவு அதிகமாக இருக்கும்.

மஞ்சள் டீ எப்படித் தயாரிப்பது?
மஞ்சள் டீ தயாரிக்க சிறிது மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் போதுமானது. நன்கு உலர்ந்த மஞ்சள் பத்தையை வைத்தும் இந்தத் டீயைத் தயாரிக்கலாம்.
செய்முறை

 • இரண்டு குவளை நீரை எடுத்து கொதிக்கவைக்கவும்.
 • ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் மஞ்சள்தூளை அதில் சேர்க்கவும்.
 • சிறிது நேரம் மிதமான தீயில் சூடுபடுத்தவும்.
 • ஐந்து நிமிடங்கள் ஆறவைத்துப் பின்னர் பருகவும்.
  மஞ்சள் டீயின் சுவையை அதிகரிக்க சில பொருள்களைச் சேர்க்கலாம்.
  · தேன் – இனிப்புச் சுவையைத் தரும். நுண்ணுயிரிகளை எதிர்க்கும் தன்மையை அதிகரிக்கும்.
  · பால் அல்லது தேங்காய்ப்பால் – இவற்றுடன் மஞ்சள் நன்கு கலப்பதால் குர்குமின் உடலில் உட்கிரகிக்கும் அளவு இன்னும் அதிகரிக்கும்
  · மிளகுத்தூள் – இதுவும் குர்குமின் உட்கிரகிக்கும் தன்மையை அதிகரிக்கும். அதோடு, டீக்கு ஒரு காரமான சுவையைக் கொடுக்கும்
  · இஞ்சி அல்லது எலுமிச்சைச் சாறு – வித்தியாசமான சுவை கிடைக்கும்.
  இப்படிப் பல்வேறு நன்மைகளைத் தரக்கூடிய மஞ்சளைச் சமையலில் அல்லது டீயாகப் பயன்படுத்துவோம். ஆரோக்கியமாக வாழ்வதற்கு மஞ்சள் உதவும்.

Leave a Reply