எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்…. தமிழக,மேற்கு வங்க முதல்வர்கள் கண்டனம் ..

டெல்லி;
எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மோடி என்ற பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.
அதேநேரம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ராகுல்காந்தி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, அதற்கு அனுமதி அளிக்கும் விதமாக 30 நாட்கள் அவகாசம் அளித்து நீதிமன்றம் பினை வழங்கியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்துடன் காங்கிரஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளில் இருந்து அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்கிற நிலை உள்ளது. ஆகையால் காங்கிரஸ் எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி நீக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இந்த நிலையில், வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மக்களவை செயலகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ராகுல்காந்தியின் தகுதி நீக்கம், சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நேற்று முதல் அமலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தி சட்ட நிபுணர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதனிடையே தகுதிநீக்கத்தை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்போம் என காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது. பழிவாங்கும் நோக்கில், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பாஜக நடந்துகொள்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ராகுல்காந்தி பதவி நீக்கம் தொடர்பாக தமிழக மற்றும் மேற்கு வாங்க முதல்வர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் …

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்தியாவின் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய அரசியல் கட்சியின் பெருந்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கூட கருத்துச் சொல்லும் ஜனநாயக உரிமை என்பது கிடையாது என்று மிரட்டும் தொனியில் இருக்கிறது இந்த நடவடிக்கை. ராகுல் காந்தி அவர்கள் மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என்பதை உணர்ந்து இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாறியுள்ளனர்! கிரிமினல் பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டாலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களின் பேச்சுக்காக தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர். இன்று, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் ஒரு புதிய வீழ்ச்சியை நாம் கண்டுள்ளோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.