எடப்பாடிதான் அதிமுக பொதுச்செயலாளர்…  ஓபிஎஸ்-க்கு நோ சொன்ன தேர்தல் ஆணையம்…

எடப்பாடிதான் அதிமுக பொதுச்செயலாளர்…  ஓபிஎஸ்-க்கு நோ சொன்ன தேர்தல் ஆணையம்…

டெல்லி:

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி.

ஆனால் தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்காமல் இருந்து வந்தது.

இதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில், தம்மை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், தாங்கள் முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் கேட்டது தேர்தல் ஆணையம். இதற்கு டெல்லி உயர்நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.

அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது; அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகவே இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஒரு மனு தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் கூடி அதிமுக விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியது.

இதனிடையே இவ்வழக்கில் புதிய திருப்பமாக எடப்பாடி பழனிசாமி தரப்பும் நேற்று தேர்தல் ஆணையத்தில் ஒரு மனுவைக் கொடுத்தது.

அதில், கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அன்பரசு அறிவிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை நிறைவடைய உள்ளது. இதனால் அதிமுகவின் பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரித்து உடனே முடிவையும் அறிவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு மனுவில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் மனு மீது தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.

இறுதியாக, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் – அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பதால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னமும் கிடைத்துள்ளது.

கர்நாடகா மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பரசன், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

Leave a Reply