மும்பை டாடா பவர் நிறுவனம் இணைந்து கோவை மாநகரில் 20 இடங்களில் அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள்!!

கோவை,
கோவை மாநகராட்சி மற்றும் மும்பை டாடா பவர் நிறுவனம் இணைந்து கோவை மாநகராட்சியில் 20 இடங்களில் அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்க உள்ளன.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கோவை மாநகராட்சி மற்றும் மும்பை டாடா பவர் நிறுவனம் இணைந்து கோவை மாநகரில் 20 இடங்களில் அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் கமிஷனர் மு.பிரதாப், மும்பை டாடா பவர் நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் வீரேந்திர கோயல் ஆகியோர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
கோவை மாநகராட்சியில் பெருகிவரும் மின்சார வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் பல நன்மைகள் ஏற்படுகிறது. இதனை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தோடு கோவை மாநகராட்சியில் 20 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைப்பது அவசியமாகிறது.
இதனை கருத்தில்கொண்டு ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் டாடா பவர் ஒருங்கிணைந்து சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது.
ஒரு வாகனத்திற்கு 60 நிமிடத்தில் 80% வரை சார்ஜிங் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் 4, அவினாசி சாலை வ.உ.சி. பூங்கா பகுதியில் 2, வாலாங்குளம் பகுதியில் 2, பெரியகுளம் பகுதியில் 1, ஆர்.எஸ்.புரம் பகுதியில் 3, சரவணம்பட்டியில் 1, புரூக் பீல்ட்ஸ் அருகே மாநகராட்சி வாகன நிறுத்துமிடம் 1, சிங்காநல்லூரில் 1, அவினாசி சாலை டைடல் பார்க் அருகே 1, காந்திபுரம் கிராஸ்கட் சாலை அருகே 1, காளப்பட்டி சாலையில் 2, துடியலூரில் 1 என 20 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது, டாடா பவர் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர் அர்விந்த் சுப்பிரமணியன், சேனல் பார்ட்னர் (தமிழ்நாடு) பி.கோகுல கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.