காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளை களையெடுக்கும் பணிகள் தொடக்கம்…. சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு …

சென்னை;
சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கஞ்சா விவகாரத்தில் 2.0, 3.0 என நடவடிக்கை எடுப்பதாக கூறினாலும், கஞ்சா நடமாட்டம் குறையவில்லை என குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
கஞ்சா குறித்து பேச வேண்டும் என்றால் அவையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும் எனவும், 5,37,846 பேர் அதிமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் திமுக ஆட்சியில் 67 ஆயிரத்து 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
மேலும், கடந்த 2 ஆண்டுகளில் 3,37,295 குட்கா மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் இரண்டு மடங்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், போதை பொருள் ஒழிப்பதில் தீவிரம் காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டை போதை பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு இரவு பகல் பாராமல் காவல்துறையினர் பணியாற்றி வருவதாக கூறிய அவர், அதிமுக ஆட்சியில் தான் போதைப் பொருட்கள் மிகுந்த மாநிலமாக விட்டு சென்றதாக குறிப்பிட்டு பேசினார்.
காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வுக்கு செல்லும் போது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவின் பேரிலேயே இவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினிலும் சில கருப்பு ஆடுகள் இருப்பதினால் அதையும் தற்போது களை எடுக்கும் பணியில் காவல்துறையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறினார்.
போதைப் பொருள் நடமாட்டத்தை அடியோடு ஒழித்து இளைஞர் எதிர்காலத்தை காப்போம் ஏனென்றால் இது திராவிட மாடல் அரசு என்று முதலமைச்சர் தெரிவித்தார்