மாயை… மாயை குறித்து மகான் யோகானந்தரின் சிந்தனைகள்…

மாயை… மாயை குறித்து மகான் யோகானந்தரின் சிந்தனைகள்…

கோவை:

மாயை குறித்து மகான் யோகானந்தரின் சிந்தனைகளை இன்று சிந்திப்போம்.இறைவனின் திட்டத்திலும் திருவிளையாடலிலும் மாயை என்பது மனிதனை ஆத்மார்த்தத்தில் இருந்து உலக விஷயங்களுக்கும், மெய்மையிலிருந்து பொய்மைக்கும் திசை திருப்புவது ஆகும்.

மாயை என்பது ஒளி மற்றும் நிழலின் விளையாட்டே. மாயை இயற்கையில் உள்ள நிலையாமை என்னும் திரையாகும் ஒவ்வொரு மனிதனும் அதன் பின்னால் உள்ள படைப்பவனை, மாறுதலற்றவனை, என்றும் நிலையாக உள்ள மெய்ப்பொருளானவனைக் காண்பதற்காக அகற்ற வேண்டிய திரையாகும். மாயை நிலையாக உள்ளது.

அது என்றும் மாறப்போவதில்லை. ஆதலால் நம்மை இக்குழப்பத்தில் ஆழ்த்தியதற்காக இறைவனைக் குறை கூறுவதை விட்டு விட்டு விட அதிலேயே நீடித்து இருக்க விழையும் நம்மையே நாம் குறை கூறிக் கொள்வது நல்லது. நாம் தான் நம்மை மாயையில் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும்.

இனி மாயையை விலக்குவதற்கான வழிகள் குறித்து மகான் யோகானந்தர் கூறும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

1. நாம் இறைவனது சாயலில், அவனது பிரதிபிம்பமாக உருவாக்கப்பட்டுள்ளோம் என்ற உண்மையை மறந்து விட்டு, அழியும் மனிதர்கள் என்ற மாயைக்கு ஆளாகி விட்டோம்.

இந்த மாயையில் இருந்து மீள்வதற்கான ஒரே வழி விவேகம். மாயை என்ற திரையை விவேகம் என்ற கூறிய வாளால் கிழித்து எறிய வேண்டும். நீடித்த மகிழ்ச்சியை நாம் காண விரும்பினால், நாம் ஓர் அழியும் மனிதன் என்று நினைப்பதை நிறுத்த வேண்டும். இதனை முற்றிலும் உணர தினமும் ஆழ்ந்து தியானிக்க வேண்டும்.

நீண்ட தியானத்தால் மட்டுமே இந்த மெய்மையை நன்கு உணர இயலும். “இன்று இருப்போர் நாளை இல்லை” என்ற பெருமை படைத்தது இந்த உலகம். எனவே ஒவ்வொரு மணித்துளியும் விலைமதிப்பற்றது என்பதை உணர்ந்து நாம் ஆன்மா என்பதை தியானம் மூலம் உணர வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் இறை சிந்தனையால் நிறைந்திருக்க வேண்டும்.

2. நான் செய்கிறேன் என்ற அகங்காரம் மனிதர்களை மாயையின் பிடியில் ஆழ்த்துகிறது.உலகத்தில் இருந்து கொண்டு பற்றின்றி நமது கடமையை நாம் செய்ய வேண்டும்.இதனால் உலக மாயையினால் ஆட்கொள்ளப்பட்டும் பிணைக்கப்பட்டும் அடிமையாவதைத் தடுக்க இயலும்.

3. மகான்களைப் பற்றிய எண்ணங்களும், அவர்கள் மீது செலுத்தும் பக்தியும் அவர்களுடன் ஒத்திசைவினை உருவாக்குகிறது. இந்த ஒத்திசைவினாலும் மாயையை அகற்றிட இயலும்.

4. “நம்மைப் பாவி என்று அழைப்பது ஒரு பாவச் செயல்” என்பது மகான் யோகானந்தரின் கூற்று.பாவம் என்பது ஒரு தற்காலிக மாயை, மேலும் என்ன நடந்ததோ அது முடிந்து விட்டது. அது இனிமேல் நமக்கு உரியது அல்ல. ஆனால் நாம் அதே தவற்றை மறுபடியும் செய்யக்கூடாது.

“மகான் யோகானந்தரின் சிந்தனைகளை முற்றிலும் உணர்ந்து, அவர் கூறும் வழிகளைப் பின்பற்றி மாயையில் இருந்து விடுபட முயற்சி செய்வோம் வாரீர்!முகுந்தன்,93453 14918யோகதா சத் சங்க தியான கேந்திரம். கோயமுத்தூர் 641 015.

Leave a Reply