மேல பாஸ் இருக்கும் போது கீழ இருக்கறவங்க கிட்ட எங்களுக்கு என்னங்க பேச்சு … அண்ணாமலை குறித்த கேள்விக்கு டென்ஷன் ஆன எடப்பாடி…

சென்னை:
இன்றைய தினம் மதுரை சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பாஜக உடன் கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு, “பாஜக கூட்டணி தொடர்கிறது” என்று எடப்பாடி தெரிவித்தார்.
மேலும், அண்ணாமலை குறித்த கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி,
“நாங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டோம். அவரை பற்றிக் கேட்க வேண்டாம் என்று மிகத் தெளிவாகவே சொல்லிவிட்டோம். கூட்டணியை நிர்ணயம் செய்யக் கூடியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள்
. பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோர் தான் இதில் முடிவெடுப்பார்கள்.. நாங்கள் தான் அவரை பற்றி எந்தவொரு கேள்வியும் கேட்க வேண்டாம் எனச் சொல்லிவிட்டோமே..
மேலே பாஸ் (Boss) இருக்கும் போது கீழே இருப்பவர்கள் குறித்து எதற்குப் பேச்சு. கீழே இருப்பவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள் முன்பு தமிழிசை இருந்தார்கள், அடுத்து எல் முருகன் வந்தார்கள். இப்படி மாறிக் கொண்டே இருப்பார்கள். அது குறித்து எல்லாம் எங்களுக்குக் கவலை இல்லை. எங்களைப் பொறுத்தவரைக் கூட்டணி என்றால் பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோர் தான் முடிவு செய்வார்கள்.
2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டசபை தேர்தல் சமயங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை அப்படித்தான் நடந்தது. இங்குள்ள மாநில தலைவர்களிடம் எல்லாம் யாரும் பேசவில்லை” என்றார்.
மேலும், அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் மேலும் சில கேள்விகளைக் கேட்க முயன்ற போது, அண்ணாமலை குறித்து எந்தவொரு கேள்வியையும் கேட்க வேண்டாம் எனத் திட்டவட்டமாக எனப் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
தொடர்ந்து தொண்டருக்கு என்ன சொல்ல வேண்டும் என்ற கேள்விக்கு,
“நானே தொண்டர் தான். எந்தக் காலத்திலும் நான் தலைவர் என்று சொன்னது இல்லை. தொண்டர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து, மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நனவாக்கும் வகையில் அதிமுக ஆட்சியைக் கொண்டு வருவோம்” என்று அவர் தெரிவித்தார்.
அதிமுகவுக்கும் பாஜக மாநிலத் தலைமைக்கும் இடையே மோதல் தொடரும் நிலையில், எடப்பாடி நேரடியாக இப்போது அண்ணாமலையை விமர்சித்துப் பேசியுள்ளார்.