கோவில்களில் குருப்பெயர்ச்சி வழிபாடு: குரு பகவானுக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் !!

கோவில்களில் குருப்பெயர்ச்சி வழிபாடு: குரு பகவானுக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் !!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இன்மையில் நன்மை தருவார் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், மதனகோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் நவக்கிரகங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி குரு பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

குருபெயர்ச்சியை முன்னிட்டு மதுரை நேதாஜி ரோடு பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு யாகம், அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் தட்சிணாமூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜை செய்து வழிபட்டனர்.

மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் உள்ள கோமதி அம்பிகை சமேத சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி கோவிலில் குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை, அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது.

குரு பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாறு, பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. குரு பகவான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

அலங்காநல்லூர் அய்யப்பன் கோவிலின் உள் பிரகாரத்தில் குருபகவான் சன்னதி உள்ளது. இங்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதையொட்டி சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க குருபகவானுக்கு பல்வேறு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பரிகார ராசிக்காரர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Leave a Reply