மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் குறிப்பிடத்தக்கது சித்திரை திருவிழாவாகும். இந்த விழா 12 நாட்கள் கொண்டாடப்படும். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து மீனாட்சி-சுந்தரேசுவரரை வழிபடுவார்கள்.

சித்திரை திருவிழா நடக்கும் 2 வாரங்கள் மதுரை மாநகரம் திருவிழா கோலம் பூண்டிருக்கும். இந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று(23-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தன.

இதையும் படியுங்கள்: நான்கு மாசி வீதிகளில் 600 விளக்குகள்: மின்னொளியில் வலம் வந்த மீனாட்சி-சுந்தரேசுவரர்
காலை 10 மணி அளவில் மீனாட்சி, பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரம் அருகில் எழுந்தருளினர். பட்டர்கள் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிட்டனர்.

சித்திரை விழா நடக்கும் நாட்களில் சுவாமி அம்பாள் சகிதம் தினந்தோறும் காலை, இரவு ஆகிய 2 வேளைகளிலும் கற்பக விருட்சம், பூதம், வெள்ளி சிம்மாசனம், தங்க சப்பரம், ரிஷபம், மரவர்ண சப்பரம், இந்திர விமானம் உள்பட பல்வேறு வாகனங்களில், வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அப்போது 4 மாசி வீதிகளிலும் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் வலம் வந்தார். மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா புறப்பட்டார். இன்று இரவும் சுவாமிகளின் ரத வீதி உலா நடக்கிறது.

நாளை (24ந்தேதி) சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். 3-ம் நாளான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சுவாமி கைலாச பர்வதம் வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் காட்சியளிப்பார்கள். வருகிற 26-ந்தேதி தங்க பல்லக்கு நிகழ்ச்சி நடக்க உள்ளது.

27-ந்தேதி வேடர் பரி லீலை நடைபெறும். அப்போது சுவாமிகள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்கள். 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சைவசமயம் ஸ்தாபித்த வரலாற்று லீலை நடக்கிறது. அன்று சுவாமிகள் ரிஷப வாகனத்தில் காட்சியளிப்பார்கள். 29-ந்தேதி நந்திகேஸ்வரர் யாளி வாகனத்தில் சுவாமிகள் எழுந்தருளுவார்கள்.

வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீனாட்சி பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் உலா வருவார். அடுத்த மாதம்(மே) 1-ந்தேதி(திங்கட்கிழமை) திக் விஜயம், இந்திர விமான உலா நடக்கிறது.

2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும். அன்று இரவு யானை வாகனம், புஷ்ப பல்லக்கில் சுவாமிகள் வலம் வருவார்கள். 3-ந்தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அன்று மாலை சுவாமிகள் சப்தவர்ண சப்பரத்தில் உலா வருவார்கள். 4-ந்தேதி(வியாழக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவுபெறுகிறது.

Leave a Reply