மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரில் வள்ளி – தெய்வானை உடனாய சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தல வரலாறு….

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரில் வள்ளி – தெய்வானை உடனாய சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தல வரலாறு….

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரில் உள்ளது, பழமையான வள்ளி – தெய்வானை உடனாய சுப்பிரமணிய சுவாமி ஆலயம். இந்த ஊரைச் சுற்றிலும் முன்காலத்தில் ‘பிரம்பு’ எனப்படும் முள்செடி காடாக இருந்தால் ‘பிரம்பில்’ என்றும், தட்சனின் யாகத்தில் பங்கேற்ற சாபம் நீங்க பிரம்மதேவன் சிவபெருமானை வழிபட்ட தலம் என்பதால் ‘பிரம்ம மங்களபுரம்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது. ‘பிரம்பில்’ என்பதே காலப்போக்கில் ‘பிரம்பூர்’ என்றும், பின்னர் ‘பெரம்பூர்’ என்றும் பெயர் பெற்றுள்ளது.

இந்த ஆலயம் முருகப்பெருமானை மூலவராகக் கொண்டது என்றாலும், ஆதியில் இது சிவாலயமாக இருந்துள்ளது. தாருகாவனத்து முனிவர்களால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவபெருமானை, சூரபத்மனை சம்ஹாரம் செய்து, தெய்வானையை திருமணம் முடித்து திரும்பிய முருகப்பெருமான் வழிபட்டார். அந்த தம்பதிக்கு அருளாசி வழங்கிய ஈசன், தன் மகனை இத்தலத்திலேயே இருந்து அருள்பாலிக்குமாறு கூறினார். அதன்படியே முருகப்பெருமான் இங்கு தங்கியதாக தல வரலாறு சொல்கிறது.

பிரம்ம தேவன் வழிபட்ட அஷ்ட பிரம்ம தலங்களில் இதுவும் ஒன்று. அதுமட்டுமின்றி, சூரபத்மனால் அமைக்கப்பட்ட கந்தபுஷ்கரணியை தல தீர்த்தமாக கொண்டது, சூரபத்மன் மயிலாக வந்து முருகனை வழிபட்டு ஞானோபதேசம் பெற்ற தலம், ஆறுமுகங்களுடன் அருளும் இறைவனை வழிபடுவதால் ஆறுபடை வீடுகளையும் வழிபட்ட பலனை தரும் ஆலயம், அகத்தியர் வழிபட்ட தலங்களில் ஒன்று, பிரம்பு என்னும் முள்செடியை தல விருட்சமாகக் கொண்ட ஆலயம், ராஜராஜசோழன் பிரதிஷ்டை செய்த இடஞ்சுழி விநாயர் சன்னிதி அமைந்த ஆலயம் என பல்வேறு சிறப்புகளுடன் விளங்குகிறது, இந்த சுப்பிரமணியர் கோவில்.

பொதுவாக சிவன் கோவில்களில், சிவன் முதன்மை தெய்வமாக தனிச்சன்னிதியில் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் அருள்பாலிப்பார்கள். சிவன் சன்னிதிக்கு பின்புறம் அல்லது வடமேற்கு திசையில் முருகனுக்கு தனிசன்னிதி இருக்கும். ஆனால் இத்தலத்தில் முருகப்பெருமான் பிரம்மாவுக்கும், மயிலாக மாறிய சூரபத்மனுக்கும் ஞானோபதேசம் அளித்து ஞானகுருவாக விளங்குவதால், அவரே மூலவராக கிழக்கு நோக்கியும், தெய்வானை தனி சன்னிதியில் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.

பிரகாரத்தின் வடமேற்கில் சிவனார் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்ற பெயரில் கிழக்கு நோக்கியும், ஆனந்தவல்லி அம்மன் தெற்கு நோக்கியும் வீற்றிருக்கின்றனர். தந்தை இருக்கும் இடத்தில் இருந்து மகனும், மகன் இருக்குமிடத்தில் இருந்து தந்தையும் அருள்பாலிக்கும் அமைப்பு இங்கு மட்டுமே உள்ளதாக சொல்கிறார்கள்.

இத்தல இறைவனை, திருநாவுக்கரசர் வழுவூர் கோவிலில் இருந்து பாடியுள்ளார். ஆனாலும் இந்த ஆலயம் தேவார வைப்புத்தல பட்டியலில் இடம்பெறவில்லை. ஆலயம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள தலவரலாற்று கையேட்டில் அப்பாடல் இருக்கிறது. இவ்வாலயம் பற்றி சிதம்பரநாதமுனிவர், தனது ஷேத்திரக் கோவை பிள்ளைத்தமிழில் ஒரு பதிகம் பாடியுள்ளார்.

கிழக்கு நோக்கிய நிலையில் ஐந்து நிலை கோபுரத்துடன், 7 கலசத்துடன் கூடிய பிரமாண்ட கோபுரம், இரண்டு பிரகாரங்கள், அர்த்தமண்டபம், மகாமண்டபம் என கோவில் பெரியதாக அமைந்துள்ளது.

கோவில் நுழைவு வாசலில் விநாயகர், இடும்பன் சன்னிதிகள் உள்ளன. உட்புறம் வசந்தமண்டபம், அதன் எதிரே தீர்த்தக் குளமான கந்தபுஷ்கரணி இருக்கிறது. பிரதான ஆலயத்தில் முருகப்பெருமான் சன்னிதியும், மகாமண்டபத்தில் தெய்வானை சன்னிதியும் உள்ளன. மூலவர், வள்ளி- தெய்வானை உடனாய ஆறுமுகப்பெருமானாக பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்து காட்சி அருள்கிறார். மகாமண்டபத்தில் ராஜராஜசோழன் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்த இடஞ்சுழி விநாயகரின் சன்னிதியைக் காணலாம்.

வெளிப்பிரகாரத்தின் வடமேற்கு திசையில் பக்தர்களின் கடன் நிவர்த்திக்கு அருள்பாலிக்கும் பிரம்மபுரீஸ்வரர் குபேரலிங்க வடிவிலும், அம்பிகை ஆனந்தவல்லி என்ற திருநாமத்துடனும் எழுந்தருளியுள்ளனர்.

சிவாலய கோஷ்டத்தில் தெற்கில் அகத்தியர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் பெருமாள், வடக்கில் துர்க்கை மற்றும் தனி சன்னிதியில் சண்டிகேஸ்வரர் இருந்து அருள்பாலிக்கின்றனர். சிவாலயம், முருகப்பெருமான் கோவிலுக்குள் உள்ளதால் தனிக்கொடிமரம் இல்லை. உட்பிரகாரத்தில் சனீஸ்வரருக்கு தனி சன்னிதியும், நவக்கிரக சன்னிதியும், ஐயப்பன் சன்னிதியும் உள்ளது. இவ்வாலய தட்சிணாமூர்த்தி ‘குக தட்சிணாமூர்த்தி’யாகவும், சண்டிகேஸ்வரர் ‘குக சண்டிகேஸ்வர’ராகவும் விளங்குகின்றனர்.

சிவன் மற்றும் முருகனுக்குரிய தலமாக இது விளங்குவதால், தினசரி ஐந்துகால பூஜைகளுடன், வழக்கமான நித்ய, வார, பட்ச பூஜைகளும், ஆண்டு உற்சவங்களாக பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், சித்ரா பவுர்ணமி, தனுர்மாத பூஜை ஆகியவையும் சிறப்பாக நடத்தப்பெறுகின்றன.

இக்கோவில் பிற்கால சோழர்களால் படிப்படியாக கட்டப்பட்டுள்ளது. 20-ம் நூற்றாண்டில் மிளகு செட்டியார் என்னும் பக்தரால் ஆலயம் புதுப்பிக்கப்பட்டதுடன், ராஜகோபுர திருப்பணிகளும் தொடங்கப்பட்டது. ஐந்து நிலைகள் கொண்ட இதன் ராஜகோபுரத்தில் மூன்று நிலைகள் மட்டுமே அவரால் கட்ட முடிந்தது. பின்னர் 1960-ல் மேலும் 2 நிலைகள் கட்டி முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து 1994-ல் அனைத்து சன்னிதிகளும் பாலாலயம் செய்யப்பட்டு, முழுமையாக திருப்பணி நடைபெற்று மீண்டும் 2001-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 26-4-2023 (புதன்கிழமை) மீண்டும் கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது.

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும் இந்த ஆலயம், ஆடுதுறையில் இருந்து பொறையார் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலைகள் சந்திக்கும் மங்கநல்லூரில் இருந்து கிழக்கில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து மங்கநல்லூர், சங்கரன்பந்தல் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் பெரம்பூர் வழியே செல்கின்றது. மயிலாடுதுறை, பொறையார், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களிலிருந்து நேரடி பேருந்து வசதியும் உள்ளது.

இவ்வாலய முருகப்பெருமானை, தொடர்ந்து 6 வாரங்கள் 6 அகல்விளக்கு தீபம் ஏற்றி, செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை அகலும். முருகப்பெருமானுக்கு சண்முக அர்ச்சனை செய்தால், பிறப்பற்ற நிலை உண்டாகும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல முருகனை பிரார்த்தனை செய்துகொண்டால் விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும்.
இழந்தப் பதவியைப் பெற விரும்புபவர்கள், புதிய பதவி கிடைக்க வேண்டுவோரும், நம்பிக்கையுடன் இத்தல முருகப்பெருமானை வணங்கி வரலாம். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், முருகனுக்கு காவடி எடுத்தும், பால் அபிஷேகம் செய்தும், சந்தனத்தால் அலங்காரம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுகின்றனர்.

இந்தக் கோவிலில் சிவபெருமான், குபேர திசையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவரை திங்கட்கிழமை, பிரதோஷம், சிவராத்திரி போன்ற நாட்களில் வில்வம் சமர்ப்பித்து வழிபட்டால், கடன் நிவர்த்தி மற்றும் தொழில் அபிவிருத்தி ஏற்படும். இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகுந்த சக்தி படைத்தவள்.

சாந்த துர்க்கையாக இருக்கும் அந்த தேவியை செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும், துர்க்காஷ்டமியின் போதும் தீபமேற்றி வழிபடுவோருக்கு, வேண்டும் வரம் அருள்வாள்.

ஆண்டுதோறும் தை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று 501 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அதில் பங்கேற்றால் சகல பலன்களும் கிடைப்பதுடன், குடும்ப பிரச்சினைகள் தீர்ந்து செல்வம் கொழிக்கும்.

Leave a Reply