தொகுதிக்கு ஏன் வருவதே இல்லை என கேள்வி கேட்ட இளைஞரின் கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ… அதிர்ச்சி சம்பவம்…

பெங்களூர்:
விஜயாப்புரா மாவட்டம் பபலேஷ்வர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்எல்ஏவான எம்பி பாட்டீல் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் இந்த தொகுதியில் கடந்த 2008, 2013, 2018 ஆகிய 3 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் முதல்வர் சித்தராமையாவின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். தற்போது எம்எல்ஏவாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி மீண்டும் எம்பி பட்டீலுக்கு பபலேஷ்வர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கி உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு எம்பி பாட்டீல் தனது ஆதரவாளர்களுடன் கிராமங்களில் ஓட்டு சேகரிப்பில் ஈடபட்டு வந்தார்.
அப்போது அவர் தேவபுரா கிராமத்துக்கு சென்றார். ஏராளமான மக்கள் கூடியிருந்த நிலையில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்த வேளையில் ஹனுமந்தா என்ற இளைஞர் திடீரென எழுந்து எம்பி பாட்டீலுக்கு எதிராக குரல் கொடுத்தார்.
இதுபற்றி ஹனுமந்தா கூறுகையில்,
‛‛தேர்தல் வந்ததால் தான் 5 ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்துக்கு வந்து உள்ளீர்கள். எங்களின் கிராமத்துக்கு எந்த வளர்ச்சி பணிகள் செய்தீர்கள்? சொல்லுங்கள் பார்ப்போம்?” என கேள்வி எழுப்பினார்.
இதனால் கோபமடைந்த எம்பி பாட்டீல் கூட்டத்துக்கு நடுவேயே ஹனுமந்தாவின் கன்னத்தில் ‛பளார்’ என அடித்தார். அதோடு ஆத்திரம் அடங்காத எம்பி பட்டீல் தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து சென்று அடித்தார்.
இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக செல்போனில் பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதுதொடர்பாக கர்நாடகா பாஜவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு, ‛‛காங்கிரஸின் டிஎன்ஏவில் குண்டாயிசம் உள்ளது. திமிர்பிடித்த கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ எம்பி பாட்டீல் குறைகளை சொன்ன இளைஞரை தாக்குகிறார்.
இதன்மூலம் குறைகளை கூறினால் தாக்குவோம் என்ற ஒரே உத்தரவாதத்தை தான் காங்கிரஸ் கட்சி வழங்குகிறது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.