தரம் குறைந்த பால் பவுடர் , வெண்ணையில் துர்நாற்றம், சில மணி நேரத்திலேயே கெட்டுப் போகும் பால் பாக்கெட்டுகள் என ஆவின் மீது அடுக்கடுக்கான புகார்கள்…

தரம் குறைந்த பால் பவுடர் , வெண்ணையில் துர்நாற்றம், சில மணி நேரத்திலேயே கெட்டுப் போகும் பால் பாக்கெட்டுகள் என ஆவின் மீது அடுக்கடுக்கான புகார்கள்…

சென்னை;

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழகம் முழுவதும் ஆவினுக்கான பால் வரத்து இன்னும் சீரடையாததால் பால் விநியோகத்தில் தொடரும் தட்டுப்பாடு, குளறுபடிகள், தரம் குறைந்த பால் பவுடர் மற்றும் வெண்ணையால் துர்நாற்றம் வீசுவதோடு, விநியோகம் செய்த சில மணி நேரத்திலேயே கெட்டுப் போகும் பால் பாக்கெட்டுகள் என பால் முகவர்கள் தினசரி சந்திக்கும் இன்னல்கள் ஏராளம்.

பால் முகவர்கள் தங்களின் இன்னல்களை, இடர்பாடுகளை ஆவின் நிர்வாகத்தின் கவனத்திற்கு தொடர்ச்சியாக கொண்டு சென்றாலும் கூட பிரச்சினைகளை சரி செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், புகார் தெரிவிக்கும் பால் முகவர்கள் மீதே பழிவாங்கும் நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஒன்றியங்களின் பொது மேலாளர்கள் முடுக்கி விடுவதையும், அதனை ஆவின் நிர்வாக இயக்குனர் கண்டும் காணாமல் இருப்பதையும் காணும் போது ஒட்டுமொத்த ஆவின் நிர்வாகமும் தனியார் பால் நிறுவனங்களோடு மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டு ஆவின் பால் விற்பனையை பால் முகவர்களாக புறக்கணிக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகின்றனரோ..? என்கிற சந்தேகம் எழுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகால திமுக ஆட்சியில் அதிகளவில் விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளான ஒரே துறை பால்வளத்துறையும், தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினும் தான்.

ஆனால் அரசோ கண், காதுகளை மூடிக்கொண்டு, கைகளையும் தானே கட்டிப் போட்டுக் கொண்டு இருப்பது ஆவினை அழிவிற்கே கொண்டு செல்லும் என்பதை தமிழக முதல்வர் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். #TNMilkAssociation @CMOTamilnadu @AavinTN” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply