கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு !!

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு !!

கோவை,

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும், சிங்காநல்லூர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, சௌரிபாளையம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, கணபதி பகுதி -1 இல் 60 உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கணபதி பகுதி -2இல் 56 வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப்பணிகள் குறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுவரும் கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும், கட்டடங்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

சௌரிபாளையம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு 36 சென்ட் நிலத்தில் 5 தளங்களுடன் 27,527 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. வணிக வளாகம் கட்டடம் வாடகைக்கு தயார் நிலையில் உள்ளது. வீடுகளுக்கு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் வாடகைக்கு விடப்பட உள்ளது.

கணபதி பகுதி -1 இல் 60 உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கணபதி பகுதி -2இல் 56 வருவாய் பிரிவு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதில் ரூ.55 லட்சம் முதல் ரூ.72 லட்சம் வரையிலான வீடுகள் உள்ளன.

சிங்காநல்லூரில் 40 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட 960 குடியிருப்புகள் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. முதலமைச்சரின் உத்தரவின்படி, வீட்டுவசதி வாரியம் சார்பில், அங்குள்ள குடியிருப்புவாசிகளை ஒருங்கிணைத்து வீடுகளை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த குடியிருப்புகளில் 4 அசோசியேன்கள் இருந்தன. அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு குழு அமைத்து அவர்கள் மூலம் பில்டர்ஸ் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானப்பணிகள் துவங்கப்படவுள்ளன.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டப்படும் கட்டடங்கள் தரமானதாக கட்ட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். ஜாயிண்ட்வென்சர் முறையில் வீடுகள் கட்டப்படவுள்ளதால், கட்டடங்கள் தரமானதாக அமையும். மேலும், ஒவ்வொரு நிலையிலும் கட்டுமானப்பணிகள் அரசின் சார்பில் ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, கலெக்டர் கிராந்திகுமார்பாடி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவிச்சந்திரன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் எஸ்.அன்புமணி, செயற்பொறியாளர் பெரியசாமி உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply