தஞ்சை மாவட்டம் திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!!

தஞ்சை மாவட்டம் திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!!

தஞ்சை மாவட்டம் திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டு சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 7-ந் தேதி வரை 13 நாட்கள் விழா நடக்கிறது.

முன்னதாக நேற்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை சட்டநாத தம்பிரான் சுவாமிகள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

29-ந் தேதி (சனிக்கிழமை) மாலை தன்னைத்தான பூஜித்தல் நடைபெறுகிறது. அன்று 6 ஊர்களிலிருந்து சாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது.

வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

இதில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறின் 4 வீதிகளில் வலம் வருகிறார். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேர்4 வீதிகள் வழியாக வந்து நிலையடி அடைந்த உடன் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரதாசம் வழங்கப்படுகிறது.

மே 6-ந் தேதி(சனிக்கிழமை) முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது.

இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெறுகிறது. 7-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் மாலை பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும்.

விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சாமிகள் வழிகாட்டுதல்படி தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Leave a Reply