முதுகெலும்பை உறுதியாக்க உதவும் சலம்ப புஜங்காசனம் !!

பாலாசனத்துக்கு மாற்று சலம்ப புஜங்காசனம் ஆகும். பாலாசனம் என்பது குழந்தை குப்புறப் படுத்c நிலை என்று பார்த்தோம். சலம்ப புஜங்காசனம் என்பது முழங்கைகளைத் தரையில் தாங்கி மேலுடலை உயர்த்துவது. புஜங்காசனத்தை பாதி நிலையில் செய்வது போல் இருக்கும். ‘சலம்பம்’ என்றால் ‘ஆதரவு’ (support). ‘புஜங்க’ என்றால் ‘பாம்பு’. பாதி அளவு பாம்பு படம் எடுத்தது போலுள்ள நிலை என்பார்கள்.
ஆனால், சரியாகச் சொன்னால், படுத்த நிலையிலுள்ள குழந்தை படுத்து தவழ்வது இந்த நிலையில்தான். முழங்கைகளை ஊன்றி, மார்பினால் உந்தித்தான் குழந்தைகள் ஆரம்பத்தில் தவழும். குழந்தைகளின் இந்த நிலைதான் அவற்றை முட்டி போட்டும், தவழவும், பின் நடக்கவும் வைக்கிறது.
பலன்கள்
முதுகெலும்பை உறுதியாக்குகிறது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது.தோள்களை உறுதியாக்குகிறது. நுரையீரலின் செயல்பாட்டைச் செம்மையாக்குகிறது. இடுப்புப் பகுதியை பலப்படுத்துகிறது. ஜீரண உறுப்புகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது.
செய்முறை
விரிப்பில் குப்புறப்படுத்துக் கொள்ளவும். கைகளை மடித்து கை முட்டி மார்புக்கு அருகில் இருக்குமாறு வைத்து முன்னங்கைகளைத் தரையில் வைக்கவும். இரண்டு முன்னங்கைகளும் நேராக இருக்க வேண்டும். தலையையும் மார்பையும் உயர்த்தவும். இப்போது உங்கள் கை முட்டி, உங்கள் தோள்களுக்கு நேர் கீழே இருக்கும். முகத்தை நேராக வைக்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், ஆரம்ப நிலைக்கு வரவும்.
முதுகுத்தண்டில் தீவிர கோளாறு உள்ளவர்கள், தோள் மற்றும் கை முட்டிகளில் தீவிர வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். கழுத்து வலி உள்ளவர்கள், முகவாய் மார்புக்கு அருகே வருமாறு கீழ் நோக்கி தலையைக் குனியவும்.