“தெய்வீக அன்பு” பற்றி மகான் யோகானந்தர்…

“தெய்வீக அன்பு”  பற்றி மகான் யோகானந்தர்…

கோவை:

தெய்வீக அன்பின் மகத்துவம் பற்றி யோகானந்தர்  “தெய்வீக அன்பை வளர்ப்பது எப்படி” என்ற குறு நூலில் விளக்கி உள்ளார். அது பற்றிய சில சிந்தனைகள்.

ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடையே உள்ள அன்பு பரிபூரணமானது. அன்பு எங்கோ அங்கு ஆனந்தம் உண்டு. அன்பின் ஈர்ப்பு சக்தி எல்லா படைப்புகளையும் இணக்கமாக வாழவும், பிரபஞ்ச விலக்கு சக்தியான மாயைக்கு எதிராகச் செயலாற்றி இறைவனை நாடவும் செய்கிறது. தெய்வீக அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை.

தியானத்தின் மூலம் இறைவனுடன் தொடர்பு கொள்ளும் போது மிக உயர்ந்த தெய்வீக அன்பினை உணர முடியும். சொல்லில் அடங்கா, தாங்கவொன்னாப்  பேரன்பு நம்மைச் சூழும். நாம் பெறும் அத்தூய அன்பைப் பிறருக்கு வாரி வழங்கவும்  இயலும். தெய்வீக அன்பின் ஒரு துளியை உணர்ந்தால்,  அது அளவிடற்கு அறியா ஆனந்தத்தில் நம்மை ஆழ்த்தி, முற்றிலும் மூழ்கடித்து விடும். தெய்வீக அன்பில் மூழ்கி இருக்கும் போது பேதங்கள் யாவும் மறைந்துவிடும். யாவரும் என் நண்பர்கள் எனக்கு எதிரிகள் யாரும் இல்லை என்ற மனப்பான்மை உருவாகும். இறைவனின் படைப்புகள் யாவற்றையும் நேசிக்கும் மனப்பக்குவம் பிறக்கும். ஆழ்ந்த தியானத்தின் மௌனத்தில் ஆனந்தம் பொங்கி எழுகின்றது. அனைவரையும் நேசிக்கவும், ஆழ்ந்து தியானிக்கவும் முயன்றால் கற்பனைக்கு எட்டாத அன்பு நமது வாழ்க்கையில் வந்து சேரும் என்கிறார் மகான் யோகானந்தர்.

பல்வேறு வகையான மனித அன்புகளும் ஒரே பிரபஞ்ச அன்பிலிருந்து தான் பிறக்கின்றன. தந்தையின் அன்பு பகுத்தறிவு சார்ந்தது. ஆனால் தாயின் அன்போ உணர்வு சார்ந்தது. நிபந்தனை அற்றது. எத்தவறினையும் மன்னிக்க வல்லது. கைமாறு கருதாதது. கேளாதே கிடைப்பது. எனவே அன்னையின் அன்பு இறை அன்பிற்கு ஈடானது.

இறைவன் சத்-சித்-ஆனந்த வடிவினன். என்றும்- இருப்பவன், என்றும்- விழிப்பானவன், என்றும்- புத்தம் புது ஆனந்தம். நாம் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டுள்ள ஆன்மாக்கள். நாம் ஓர் ஆன்மா என்ற முறையில் தனித்துவம் பெற்ற சத்- சித்- ஆனந்தம். “நாம் ஆனந்தத்தில் இருந்து வந்தவர்கள், ஆனந்தத்திலேயே நாம் வாழ்கிறோம். மேலும் அந்த தூய ஆனந்தத்தில் நாம் ஒரு நாள் மீண்டும் லயமாகி விடுவோம்”.

பொதுவாகவே மனித அன்புகள் யாவுமே நிலையற்றவை.. களங்கம் உடையவை. ஆனால் தெய்வீக அன்பு மட்டுமே முழுமையானது, மாசற்றது. இந்த உண்மையை உணர்ந்து, தீவிர தாகத்துடன் இறைவனைத் தேடுவோம். அதிகமாகவும், ஆழ்ந்து தியானிப்போம். தெய்வீக அன்பை நாம் நமது இதயங்களில்  உணருவோம்.. அப்பொழுது அன்பே ஆனந்தம், அந்த ஆனந்தமே இறைவன் என்ற மெய் உணர்தல் தோன்றும். எனவே தெய்வீக அன்பைப் பெறுவதற்கு மகான் யோகானந்தர் கற்பித்த வழிகளில் முயல்வோம் வாரீர்!

முகுந்தன், 9345314918,
யோகதா சத்சங்க தியான கேந்திரம் கோயமுத்தூர்- 641 015

Leave a Reply