சகல தோஷங்களை நீக்கும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் !!

சகல தோஷங்களை நீக்கும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் !!

தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களிலேயே பிரசித்திப் பெற்ற ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு கோவில் அமைந்துள்ளது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சூரன்கொட்டாய் கிராமத்தில் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது.

மிகவும் பிரசித்திப் பெற்ற இந்த கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரக்கூடிய தெய்வமாக ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் உள்ளார்.

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் ஏழுமலையான் சுவாமி சிலைக்கு அடியில் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் காகபுஜண்டர், கொங்கனார் ஆகிய 2 சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இதன்பிறகு சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூரன்கொட்டாயில் ஸ்ரீஸ்வர்ணா கர்ஷண பைரவருக்கு கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில் அபூர்வ திருவோடு மரம் உள்ளது.

சிறப்பு மிக்க இந்த கோவிலில் வன்னிமரம் தல விருட்சமாக அமைந்துள்ளது. அதன் அடியில் சர்வசுத்தி புல் உள்ளது. அதை சுற்றி வந்தால் சகல தோஷங்களும் நீங்குகிறது. மேலும் கோவிலில் கொடி மரம் அமைந்துள்ளது. இதற்கு வெண்கலத்தால் கவசம் போடப்பட்டுள்ளது. கோவிலில் மூலவராக உள்ள பழமைவாய்ந்த கால பைரவர் லிங்கமும், ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவரும் கலசத்தை ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

வில்வ மரம், வேப்பங்காடு, அத்திமரம் ஆகிய இயற்கை வளங்களை கொண்ட மரம் , செடிகள் கோவிலில் அமைந்துள்ளன. சகல தோஷங்கள் நீங்க, பக்தர்கள் செல்வ செழிப்புடன் வாழ ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகிறார்.

Leave a Reply