ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி; அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணி 5-வது வெற்றி!!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி; அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணி 5-வது வெற்றி!!

மொகாலி,

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்றிரவு மொகாலியில் அரங்கேறிய 38-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. தோள்பட்டை காயத்தால் கடந்த 3 ஆட்டங்களில் ஆடாத பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் அணிக்கு திரும்பினார். ‘டாஸ்’ ஜெயித்த அவர் முதலில் லக்னோவை பேட்டிங் செய்ய பணித்தார்.

இதையடுத்து லோகேஷ் ராகுலும், கைல் மேயர்சும் லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். ராகுல் 12 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து ஆயுஷ் பதோனி வந்தார்.

மேயர்சும், பதோனியும் பஞ்சாப்பின் பந்து வீச்சை பஞ்சராக்கினர். ஆடுகளம் முற்றிலும் பேட்டிங்குக்கு உகந்த வகையில் இருந்ததால் பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த இயலவில்லை. அர்ஷ்தீப்சிங், சிகந்தர் ராசா ஓவரில் பந்தை நாலாபுறமும் தெறிக்கவிட்ட மேயர்ஸ் 20 பந்துகளில் தனது 4-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். மேயர்ஸ் 54 ரன்களில் (24 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு இறங்கிய ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிசும் பஞ்சாப்பை விழிபிதுங்க வைத்தார். அவரும் ரன் மழை பொழிந்ததால் ஸ்கோர் மின்னல் வேகத்தில் எகிறியது. ஸ்கோர் 163 ஆக உயர்ந்த போது பதோனி 43 ரன்னில் (24 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறினார். இதைத் தொடர்ந்து வந்த நிகோலஸ் பூரன் ‘ஹாட்ரிக்’ பவுண்டரியோடு ரன்வேட்டையை ஆரம்பித்தார். 15.5 ஓவர்களில் அந்த அணி 200-ஐ தொட்டது.

ஐ.பி.எல்.-ல் தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்த ஸ்டோனிஸ் 72 ரன்களில் (40 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) சாம் கர்ரன் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மாவிடம் பிடிபட்டார். இறுதி ஓவரில் பூரன் 45 ரன்களில் (19 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார்.

257 ரன் குவிப்பு

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 5 விக்கெட்டுக்கு 257 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு அணியின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

2013-ம் ஆண்டு புனே வாரியர்சுக்கு எதிராக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக நீடிக்கிறது. தீபக் ஹூடா 11 ரன்னுடனும், குருணல் பாண்ட்யா 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் ரபடா 2 விக்கெட்டும், அர்ஷ்தீப்சிங், சாம் கர்ரன், லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பஞ்சாப் தோல்வி

பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ஷிகர் தவான் ஒரு ரன்னில் கேட்ச் ஆனார். மாற்று ஆட்டக்காரர் பிரப்சிம்ரன்சிங் 9 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அப்போதே இனி இலக்கை அடைவது சிரமம் என்பதை உணர்ந்த பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் முடிந்தவரை ரன்ரேட்டை உயர்த்துவது என்ற நோக்குடன் மட்டையை சுழற்றினர். அதர்வா டெய்ட் (66 ரன், 36 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), சிகந்தர் ராசா (36 ரன்), லியாம் லிவிங்ஸ்டன் (23 ரன்), ஜிதேஷ் ஷர்மா (24 ரன்), சாம் கர்ரன் (21 ரன்) ஆகியோரின் கணிசமான பங்களிப்பு அந்த அணி 200-ஐ கடக்க உதவியது.

பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்ேனா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் யாஷ் தாக்குர் 4 விக்கெட்டும், நவீன் உல்-ஹக் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

8-வது லீக்கில் ஆடிய லக்னோவுக்கு இது 5-வது வெற்றியாகும். பஞ்சாப்புக்கு 4-வது தோல்வியாகும்.

Leave a Reply