ரூ.500 கோடி நஷ்ட ஈடு -ஆர்.எஸ்.பாரதி ரூ.500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு – அண்ணாமலை… மாறி மாறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பிகொள்ளும் பாஜக, திமுக…

சென்னை :
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக பிரமுகர்களின் சொத்துப்பட்டியல் எனக் கூறி ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களின் சொத்து விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
திமுகவினரின் முதல் கட்ட சொத்து பட்டியல் இது எனக் கூறிய அவர், இது தொடர்பாக சிபிஐ-யிடம் புகார் அளிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டை திமுக முற்றிலுமாக மறுத்தது. அண்ணாமலை சொத்து பட்டியல் வெளியிட்டதுமே செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,
அண்ணாமலை எந்தவித ஆதாரமும் இன்றி அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டினார். அண்ணாமலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், கோர்ட் கோர்ட்டாக அண்ணாமலை டூர் போகப் போகிறார் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அண்ணாமலை தனது கருத்துக்கு மன்னிப்பு கோரவில்லை என்றால் 500 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரி திமுக சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி என திமுகவினர் அடுத்தடுத்து தங்களைப் பற்றி அண்ணாமலை அவதூறு பரப்பியதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி, ஆருத்ரா முறைகேடு விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ரூ.84 கோடி பெற்றதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், ஆருத்ரா முறைகேடு விவகாரத்தில் தான் ரூ.84 கோடி பெற்றதாக ஆர்.எஸ்.பாரதி கூறிய குற்றச்சாட்டை அண்ணாமலை மறுத்துள்ளார்.
மேலும், தன்னைப் பற்றி அவதூறாகப் பேசிய புகாரில் ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்கவேண்டும் என அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய ஆர்.எஸ்.பாரதி ரூ.500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் பால் கனகராஜ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்க மறுத்தால், அவர் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு தொடுக்கப்படும் எனவும் அண்ணாமலை தரப்பு அனுப்பியுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது