சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் நாளை மோதல்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் நாளை மோதல்!!

சென்னை:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா அகமதாபாத்தில் கடந்த 31-ந் தேதி தொடங்கியது.
இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும் , ‘பி’ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் , நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் , பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாட வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

ஜ.பி.எல். கோப்பையை 4 முறை கைப்பற்றிய டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வெற்றி , 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

லக்னோ (12 ரன்) மும்பை (7 விக்கெட்), பெங்களூர் (8 ரன்), ஐதராபாத் (7 விக்கெட்), கொல்கத்தா (49 ரன்) ஆகிய அணிகளை சி.எஸ்கே. வீழ்த்தி இருந்தது. ராஜஸ்தானிடம் 2 முறை (3 ரன், 32 ரன்) தோற்றது. அகமதாபாத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்சிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்து இருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 9-வது ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்சை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

சேப்பாக்கத்தில் இந்த சீச னில் நடைபெறும் 4- வது போட்டியாகும். இதில் சி.எஸ்.கே. 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் தோல்வியை தழுவியது.

பஞ்சாப் கிங்சை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவு சி.எஸ்.கே. வுக்கு கூடுதல் பலமாகும்.

ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் சென்னை அணி ரன்களை வாரி கொடுத்து இருந்தது. இதனால் 203 ரன் இலக்கை எடுப்பது சவாலாக இருந்தது. இதனால் சி.எஸ்.கே. வீரர்கள் பந்து வீச்சில் ரன்களை கட்டுப்படுத்துவது அவசியமாகும்.

சென்னை அணியின் பலமே தொடக்க ஜோடியாகும். கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இருவரும் ரன் குவித்தால் மட்டுமே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும். கான்வே 4 அரை சதத்துடன் 322 ரன்னும், ருதுராஜ் கெய்க்வாட் 2 அைர சதத்துடன் 317 ரன்னும் எடுத்துள்ளனர்.

இருவரும் முறையே ரன் குப்பால் 3-வது 4-வது இடங்களில் உள்ளனர். இது தவிர ஷிவம் துவே (236 ரன்), ரகானே (224 ரன்), மொய்ன் அலி, கேப்டன் டோனி ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

அம்பதிராயுடு தொடர்ந்து மோசமாக ஆடி வருகிறார். இம்பேக்ட் வீரரான அவரால் ஆட்டத்தில் எந்த வித ஆதிக்கத்தையும் செலுத்த முடியவில்லை. இதனால் அவரை மாற்றுவது அவசியமாகும்.

பந்து வீச்சில் துஷ்கர் கேஷ்பாண்டே நல்ல நிலையில் உள்ளார். அவர் 14 விக்கெட் எடுத்துள்ளார். ஜடேஜா 11 விக்கெட் கைப்பற்றி அதற்கு அடுத்த நிலையில் இருக்கிறார்.

பஞ்சாப் அணி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

அந்த அணி கொல்கத்தா (7ரன்) ராஜஸ்தான் (5 ரன்), லக்னோ (2 விக்கெட்), மும்பை (13 ரன்) ஆகிய வற்றை தோற்கடித்தது. ஐதராபாத் (8 விக்கெட்), குஜராத் (6 விக்கெட்), பெங்களூர் (24 ரன்), லக்னோ (56 ரன்) ஆகிய வற்றிடம் தோற்றது.

பஞ்சாப் அணியில் கேப்டன் ஷிகர் தவான் (234 ரன்), ஜிகேஷ் சர்மா, சிம்ரன் சிங், சாம்கரண், ஷாருக்கான், லிவிஸ்டோன் அர்ஷ்தீப் சிங் (14 விக்கெட்), நாதன் எல்லீஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

சேப்பாக்கத்தில் இது வரை கடந்த 3 ஆட்டத்திலும் ரசிகர்கள் திரண்டு வந்து சி.எஸ்.கே. அணிக்கு ஆதரவு அளித்தனர். நாளைய போட்டிக்கான கோலாகலத் துக்கு அவர்கள் தயாராக உள்ளனர்.

இரு அணிகளும் நாளை மோதுவது 29-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 28 போட்டிளில் சென்னை 16-ல், பஞ்சாப் 12-ல் வெற்றி பெற்றுள்ளன.

Leave a Reply