ஒரு ஐபிஎல் போட்டியே நடத்தும் அளவுக்கு அதிமுகவில் அணிகள் உள்ளன…. உதயநிதி விமர்சனம்…

ஈரோடு ;
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அந்த தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் பேசியதாவது:
தி.மு.க. எப்போதும் மக்களுக்கான கட்சி. நான் அமைச்சராக பொறுப்பு ஏற்றதும், பிரதமரை புதுடெல்லியில் சென்று பார்த்தேன். அப்போது 30 நிமிடங்கள் பேசியபோது, அவரிடம் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தேன். ஆனால், இன்னொரு கட்சியை சேர்ந்த கோஷ்டி, அதாவது எடப்பாடி பழனிசாமி கோஷ்டி பஞ்சாயத்தை சரிசெய்ய பிரதமரை சென்று சந்தித்து பேசியுள்ளார்.
அ.தி.மு.க. கடந்த தேர்தலுக்கு வந்தார்கள். இனி அடுத்த தேர்தலுக்கு வருவார்கள். ஆனால் தி.மு.க. தேர்தலுக்கு தேர்தல் வரும் இயக்கம் அல்ல. எப்போதும் மக்களுக்காக களத்தில் போராடும் இயக்கம். தமிழர்களின் நலன் காக்கும் இயக்கம்.
மேலும் கிரிக்கெட்டில் ஐ.பி.எல். நடத்துவதுபோல அ.தி.மு.க.வில் ஐ.பி.எல். நடத்தும் அளவுக்கு ஈ.பி.எஸ்.அணி, ஓ.பி.எஸ்.அணி, சசிகலா அணி, டி.டி.வி. தினகரன் அணி, தீபா அணி, அதில் டிரைவர் அணி, கணவர் அணி என்று பல அணிகள் உள்ளன என விமர்சித்தார் .