“டாஸ்மாக்” செந்தில் பாலாஜி நடத்தும் தனியார் நிறுவனம் அல்ல… – சாடிய அன்புமணி ராமதாஸ்…

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மது நிறுவனங்களுக்கும் தாங்கள் தயாரிக்கும் மதுவகைகள் அதிக அளவில் விற்பனையாக வேண்டும் என்ற நோக்கம் இருக்கலாம்; அதற்காக அவை இத்தகைய எந்திரங்களை வழங்கலாம்.
ஆனால், அவற்றை அப்படியே பயன்படுத்த டாஸ்மாக் ஒன்றும் செந்தில் பாலாஜி என்ற தனிநபர் நடத்தும் தனியார் நிறுவனம் அல்ல… தமிழக அரசு நிறுவனம். அதன் வணிக நடைமுறையில் செய்யப்படும் எந்த மாற்றமும் அரசின் கொள்கை முடிவாக இருக்க வேண்டும்; பொதுவெளியில் விவாதித்து தான் முடிவெடுக்க வேண்டும்.
அதையும் கடந்து மது நிறுவனங்கள் அவற்றின் மது வணிகத்தை அதிகரிப்பதற்காக எந்திரங்களை வழங்கி, அவற்றை டாஸ்மாக் நிறுவனம் பயன்படுத்துவதை செந்தில் பாலாஜி ஆதரிக்கிறார் என்றால், மது ஆலைகளின் லாபம் அதிகரிப்பதற்காக மது வணிகம் பெருகுவதையும் ஆதரிக்கிறார் என்று தான் பொருள். அப்படியானால் செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா… மது விற்பனைத்துறை அமைச்சரா?
தானியங்கி எந்திரங்கள் மூலம் மது விற்பனை செய்வது குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதைத் தான் மக்கள் நல அரசு மதிக்க வேண்டும். மாறாக, மது நிறுவனங்கள் இலவசமாக வழங்குகின்றன என்பதற்காக தானியங்கி எந்திரங்களை பயன்படுத்த செந்தில் பாலாஜி ஒன்றும் மது ஆலைகளின் முகவர் அல்ல… தமிழகத்தின் மதுவிலக்கு அமைச்சர்.
மதுவிலக்கு என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஏழாவது அட்டவணையில் இரண்டாவதாக உள்ள மாநிலப் பட்டியலில் எட்டாவதாக இடம் பெற்றுள்ளது. அதன்படி மது உற்பத்தி, வணிகம், விற்பனைத் தடை உள்ளிட்ட எந்த முடிவையும் மாநில அரசு தான் எடுக்க முடியும். இந்த விஷயத்தில் மத்திய அரசோ, நாடாளுமன்றமோ எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பது ஏனோ எல்லாம் தெரிந்த செந்தில் பாலாஜிக்கு தெரியவில்லை.
1970-களில் தொடங்கி கடந்த 50 ஆண்டுகளில் மூன்று தலைமுறைகள் மதுவுக்கு இரையாகிவிட்டன. இனிவரும் தலைமுறைகளாவது மதுவின் சீரழிவில் இருந்து மீட்கப்பட வேண்டும். அதற்கான ஒரே தீர்வு படிப்படியாகவோ, உடனடியாகவோ தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான்.
அதற்கான நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொள்ள வேண்டும். அவற்றில் முதல் நடவடிக்கையாக அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி விட்டு, சமூகப் பொறுப்பு மிக்க ஒருவரை அமைச்சராக்கி அவரிடம் மதுவிலக்கை ஏற்படுத்தும் பொறுப்பை முதல்வர் ஒப்படைக்க வேண்டும்.”
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.