யோகானந்தரின் ஞான குரு – ஸ்ரீ யுக்தேஷ்வர்…

கோவை:
மேலை நாடுகளில் ‘யோகாவின் தந்தை’ என்று போற்றப்படும்
ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின்
ஞான குரு ‘ சுவாமி
ஸ்ரீ யுக்தேஸ்வர் ஆவார். இவர் 1855 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி வங்காளத்தில் உள்ள செராம்பூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் பிரியா நாத் கரார். காசியில் வாழ்ந்த மகான் லாஹிரி மகாசயரின் சீடரானார். பின்னர் சுவாமி பரம்பரையில் ஒருவராகி
ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி என்ற புதிய பெயரைப் பெற்றார்.
வாழ்வின் நோக்கம்:
ஒரு கும்பமேளாவின் போது, மரணமற்ற இமய யோகி, மகாவதார் பாபாஜி, யுக்தேஸ்வரரை தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாதையில் இங்கு சங்கமம் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்துமாறு புனித விஞ்ஞானம் (Holy Science) என்ற ஒரு நூலை எழுதுமாறு பணித்தார். மேலை நாடுகளில் யோகக் கலையைப் பரப்புவதற்குப் பயிற்சி பெற ஒரு சீடரை அனுப்புவதாகவும் உறுதியளித்தார். அவரே அவரது புகழ்பெற்ற சீடர் ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் ஆவார்,
ஞானமே வடிவெடுத்த இந்த மகான் தனது முன்னோர்களின் மாளிகையை ஒரு குருகுலமாக மாற்றி, தனது சீடர்களுக்கு மிகவும் கண்டிப்பான ஓர் ஆன்மீக வழிகாட்டியாக இருந்து அவர்களை வழி நடத்தினார். மேலை நாடுகள் மற்றும் கீழை நாடுகளின் நற் பண்புகளை ஒருங்கே பெறுமாறு தனது சீடர்களைப் பயிற்றுவித்தார். சீடர்களின் ஆன்மீக முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டி அவர்களைக் கைதேர்ந்த கிரியா யோகிகள் ஆக்கினார்.
குரு மகிமை:
‘ஒரு யோகியின் சுயசரிதம்’ என்ற தனது ஒப்பற்ற நூலில் மகான் யோகானந்தர் தனது குருவின் அளப்பரிய தன்மையை விளக்கியுள்ளார்.
* ‘கருணையைப் பொறுத்தவரை எனது குரு மலரைவிட மென்மையானவர், ஆனால் கொள்கை மீறல் வரும் எனில் இடியை விட வன்மையானவர்’. *”அவருடைய ஒழுங்கு முறை என்ற வலிய சம்மட்டி அடிகளால் பல முறை நான் ஆடிப்போனதுண்டு”.
அவரது கண்டிப்பான போக்கு கண்டு ஓடிப் போனவர்கள் பலர். நன்னெறி நாடிய சீடர்களை மட்டுமே அவர் இடித்துரைத்து நல்வழிப்படுத்தினார். அவரது கண்டனங்களைக் கண்டு மனங் கலங்காது, தங்களின் பலவீனங்களைக் களைந்து , இறுதி வரை இருந்து பயிற்சி பெற்ற விவேகம் உள்ள சீடர்கள் மிகச்சிலரே. அச்சீடர்கள் கடுமையான கண்டிப்பு என்ற போர்வையின் கீழ் அவரது கனிவான இதயத்தை கண்டு அறிந்தனர்.
பொன்மொழிகள்:
* பயத்தை நேருக்கு நேர் எதிர்கொள், அது உன்னைத் தொந்தரவு செய்வதை நிறுத்திவிடும்!” என்பது அச்சமற்ற அந்த வங்காள சிங்கத்தின் வாக்கு.
* “கடந்த காலத்தை மறந்து விடு. இப்பொழுது ஆன்மீக முயற்சியில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் நீ எல்லாவிதத்திலும் முன்னேற்றம் அடைவாய்.” என்பது அவரது ஒப்பற்ற பொன்மொழி.
* “உலகில் சுய கட்டுப்பாடு உடைய சிங்கமாக உலவி வா! புலன் உணர்வுகள் என்ற தவளைகள் உன்னை உதைத்து அங்குமிங்கும் தள்ள வேண்டாம்”.
பிறந்தநாள் வைபவம்:
அகந்தை, சினம் ஆகிய அகக் கோட்டைகளை வீழ்த்தி மனித குலத்தை மேம்படச் பெய்த மகான் யுக்தேஸ்வரின் 168 ஆவது பிறந்த நாள் (10.5.2023) விழா கோவையில் உள்ள யோகதா சத்சங்க தியான கேந்திரத்தில் மாலை 6.00 மணியில் இருந்து 7.30 மணி வரை கொண்டாடப்பட உள்ளது அதில் பங்கேற்று பயன்பெற உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
கட்டுரை மூலம்: சந்தியா எஸ்.நாயர்.
மறு வடிவம்; முகுந்தன் 9345314916.
யோகதா சத்சங்க தியான கேந்திரம் கோயமுத்தூர்- 641 015