இந்தியாவில் 2027-க்குள் டீசல் வாகனங்களை தடை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை…

டெல்லி;
காற்று மாசுபடுவதைத் தவிர்க்க மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் தருண் கபூர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மத்திய எண்ணெய் அமைச்சகத்திற்குப் பரிந்துரைகளை அறிக்கையாக வெளியிட்டது.
அந்த அறிக்கையில், இந்தியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரு நகரங்களில் 2027 ஆம் ஆண்டிற்குள் 4 சக்கரங்களைக் கொண்ட டீசல் வாகனங்களைத் தடை செய்ய வேண்டும். மின்சார மற்றும் எரிவாயு எரிபொருள் வாகனங்களுக்கு மாற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மேலும், 2035 ஆம் ஆண்டிற்குள் உள் எரிப்பு எந்திரங்கள் கொண்ட இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை படிப்படியாக நிறுத்தவும், 10 ஆண்டுகளில் மாநகரங்களில் இயங்கும் டீசல் பேருந்துகளைக் குறைக்கவும் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
2035 ஆம் ஆண்டிற்குள் உள் எரிப்பு எந்திரங்கள் கொண்ட இருக்சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களைக் குறைக்கப் பகுதியளவு மின்சாரத்திற்கும், பகுதி அளவு எத்தனால் கலந்த பெட்ரோலுக்கும் மாற வேண்டும். அதுமட்டுமில்லாமல், பெட்ரோல் மூலம் இயங்கும் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்களை படிப்படியாக நிறுத்தவும் பரிந்துரை செய்துள்ளது.
மேலும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மார்ச் 31 ஆம் தேதிக்குப் பிறகு மின்சாரம் மற்றும் கலப்பின வாகனங்களின் விரைவான தத்தெடுப்பு மற்றும் உற்பத்தி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகைகளை அரசு இலக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.