பூட்டி இருக்கும் வீடுகளை குறி வைத்து திருடி வந்த தம்பதி … பொறி வைத்து தூக்கிய போலீஸ்…

ராணிப்பேட்டை ;
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் காலனியை சேர்ந்தவர் மாணிக்கம் . இவரது மனைவி சுசீலா (70). இவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு காட்டுப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர்.
இவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது யாரோ பூட்டை திறந்து நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர் .
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் சுசீலா புகார் கொடுத்தார் . இன்ஸ்பெக்டர் பழனிவேல் ,சப் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் , பாராஞ்சி கிராமம் அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்த சுகன்( 25), அவர் மனைவி தமிழ்ச்செல்வி (22 ) ஆகியோர் சுசீலாவின் வீட்டுக் கதவை திறந்து வீட்டில் வைத்திருந்த மூக்குத்தி மற்றும் ஏடிஎம் கார்டை திருடி உள்ளனர்.
அன்றைய தினமே ஏடிஎம் கார்டில் இருந்து இரு தவணைகளாக ரூ. 58,000 பணத்தை எடுத்துள்ளனர். பணம் எடுத்தது குறித்து செல்போனுக்கு மெசேஜ் வந்த போது தான் தங்களது ஏடிஎம் கார்டு திருடு போனது தெரிந்தது என சுசீலா கூறியுள்ளார்.
மேலும் வீட்டுக்குள் திருடர்கள் புகுந்த சம்பவமே ஏடிஎம்மில் இருந்து பணம் திருடும் போது வந்த மெசேஜ் மூலமாக கண்டுபிடித்ததாக தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் கணவன், மனைவியை கைது செய்து விசாரித்ததில் கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்வி ஏற்கனவே அரக்கோணம் வெங்கடேசபுரம் பகுதியில் ஸ்கூட்டரை திருடி கைது செய்யப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது .
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு எதுவும் செல்லாமல் திருட்டையே தொழிலாக கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்தது. பகல் நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடுவது இவர்களின் வாடிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.