திமுக நகராட்சி பெண் தலைவரை அலுவலகத்துக்குள் நுழைந்து  தாக்க முயன்ற அதிமுக, பாஜக கவுன்சிலர்கள்… பரபரப்பு சம்பவம் …

திமுக நகராட்சி பெண் தலைவரை அலுவலகத்துக்குள் நுழைந்து  தாக்க முயன்ற அதிமுக, பாஜக கவுன்சிலர்கள்… பரபரப்பு சம்பவம் …

செங்கோட்டை ;

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் ஆணையாளர்(பொ) ஜெயப்பிரியா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக நகர் மன்ற தலைவர் ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அந்த கூட்டத்தை விட்டு வெளியேறிய நகர்மன்ற தலைவர், தனது அலுவலகத்திற்கு வந்து அமர்ந்து கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக அதிமுக கவுன்சிலர்கள், திட்டக்குழு கூட்டத்தைப் புறக்கணித்து சென்ற காரணத்தை தலைவர் தெரிவிக்க வேண்டும் என்றும், தலைவர் உடனே வர வேண்டும் என்றும் ஆணையாளர் ஜெயப்பிரியாவிடம் வலியுறுத்தினர்.

இது நகர் மன்ற கூட்டம் அல்ல. திட்டக்குழு கூட்டம் என்றும், அரசின் உத்தரவுப்படி கூட்டம் நடைபெறுவதாக ஜெயப்பிரியா தெரிவித்தார்.

இதையடுத்து நகர் மன்ற தலைவர் ராமலட்சுமி இருந்த அறைக்குள் அதிமுக கவுன்சிலர்கள் சுடரொளி, ஜெகன், முத்துப்பாண்டி,சுப்பிரமணியன், பாஜக கவுன்சிலர் ராம்குமார் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது முன்னாள் துணைத் தலைவர் கணேசன் உள்ளிட்டோரும் நகர்மன்ற தலைவர் அறைக்கு சென்றனர்.

திடீரென நகர் மன்ற தலைவர் ராமலட்சுமியை அதிமுக கவுன்சிலர்கள் முத்துப்பாண்டி, ஜெகன், சுப்பிரமணியன், சுடர் ஒளி மற்றும் பாஜகட்சி கவுன்சிலர் ராம்குமார் உள்ளிட்டோர் மிகவும் ஆபாசமாக பேசி  திமுக நகர் மன்ற தலைவர் ராமலட்சுமியைத் தாக்க முயன்றனர்.

பாஜக உறுப்பினர் ராம்குமார், நகர்மன்ற தலைவர் டேபிளில் ஓங்கி அடித்தவாறே ஆபாசமாக பேசவும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மீண்டும் அதிமுக கவுன்சிலர் முத்துப்பாண்டி, நகர்மன்ற தலைவரை தாக்க முயன்றனர்.

இச்சம்பவம் குறித்து செங்கோட்டை காவல் நிலையத்தில் நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி புகார் செய்தார். செங்கோட்டை போலீஸார் உடனே வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது நகர் மன்ற தலைவர் அறைக்குச் செல்ல வேண்டாம் என அதிமுக கவுன்சிலர்களையும், பாஜக கவுன்சிலர்களையும் ஆணையாளர்(பொ) ஜெயப்பிரியா வலியுறுத்தியும் அவர்கள் அத்துமீறி நுழைந்து இந்த தாக்குதலில் ஈடுபட முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகர்மன்ற தலைவரை கவுன்சிலர்கள் தாக்க முயன்ற சம்பவம் செங்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply