ஒழுங்கா வேல செய்ய முடியலைனா வேற எடத்துக்கு போயிருங்க… அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தமிழக அமைச்சர் …

ஒழுங்கா வேல செய்ய முடியலைனா வேற எடத்துக்கு போயிருங்க… அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தமிழக அமைச்சர் …

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் தி.மு.க. கவுன்சிலர்கள் அளிக்கும் புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சர் தா.மோஅன்பரசனிடம் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

அதற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆய்வு கூட்டங்களை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார்.

இந்தநிலையில் 2-வது ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், கமிஷனர் அழகுமீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மாநகராட்சி கவுன்சிலர்கள், தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை எடுத்து கூறி அதனை நிவர்த்தி செய்து தரவேண்டும் என கோரினர். பெரும்பாலான கவுன்சிலர்கள் பல்வேறு புகார்களை அமைச்சர் முன்னிலையில் தெரிவித்தனர்.

அப்போது பெருங்களத்தூர் 56-வது வார்டு கவுன்சிலர் சேகர்,

தங்களது பகுதியில் உள்ள கிணற்றை காணவில்லை என அமைச்சரிடம் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் கூறும்போது, “அரசின் 1½ ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டார்கள். அந்த இடத்தில் மிகப்பெரிய கிணறு ஒன்று இருந்தது. சில தினங்களுக்கு முன்பு சென்று பார்த்தபோது அங்கு அந்த கிணற்றையே காணவில்லை.

கிணறு இருந்த இடத்தில் பெரிய சுற்றுச்சுவர் அமைத்து விட்டார்கள். அதற்கு எந்த அதிகாரிகள் ஒப்புதல் அளித்தார்கள்? என்று தெரியவில்லை. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.

பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “மேலே உள்ள அதிகாரிகள் சொல்லும் பணிகளை சரியாக செய்ய முடியவில்லை என்றால் அவர்களுக்கு கீழே பணி செய்யும் அதிகாரிகள் வேறு இடத்துக்கு சென்று விடுங்கள்” என அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார்.

Leave a Reply